நிறைய கேள்விகளுக்கு விடை தேட வேண்டியுள்ளது!!தோல்வி குறித்து மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டி!!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான லீக் சுற்றில் தோல்வி அடைந்ததை அடுத்து மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா அவர்கள் “நிறைய கேள்விகளுக்கு பதில் தேட வேண்டி இருக்கின்றது” என்று பேசியுள்ளார்.
நேற்று(மே3) நடைபெற்ற ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதியது. இதில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 169 ரன்களை எடுத்தது. 170 ரன்களை இலக்காகக் கொண்டு விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 145 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது.
24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வான்கடே மைதானத்தில் 12 வருடங்களுக்கு பிறகு தோற்கடித்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் தோல்வி குறித்து ஹர்திக் பாண்டியா அவர்கள் பேட்டி அளித்துள்ளார்.
தோல்வி குறித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா அவர்கள் “இந்த போட்டியில் நாங்கள் பேட் செய்யும் பொழுது பார்ட்னர்ஷிப் அமைக்க தவறிவிட்டோம். அடுத்தடுத்து தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தோம்.
டி20 போட்டிகளை பொறுத்த வரையில் பார்ட்னர்ஷிப் அமைப்பது மிகவும் முக்கியமான விஷயம். டி20 போட்டிகளில் பார்ட்னர்ஷிப் அமைக்கவில்லை என்றால் அதற்கான பலனை அப்பொழுதே அனுபவிக்க நேரிடும்.
எங்களுடைய பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினர். இரண்டாவது இன்னிங்சில் பனிப் பொலிவு இருந்தது. முதல் இன்னிங்சை விட இரண்டாவது இன்னிங்சில் விக்கெட் சற்று சிறப்பாக இருந்தது.
நிறைய கேள்விகளுக்கு விடை தேட வேண்டிய கட்டாயம் உள்ளது. அதற்கு சிறிது காலம் பிடிக்கும். இப்போதைக்கு சொல்வதற்கு எதுவும் கிடையாது. களத்தை விட்டு வெளியேறக் கூடாது. எப்பொழுதும் போராட்டம் வேண்டும். இதை எனக்கு நானே சொல்லிக் கொள்வேன்.
கடினமான நாட்கள் வாழ்க்கையில் வரும். இது சவாலுக்கான காலம். இந்த சவால்கள்தான் உங்களை சிறந்ததாக மாற்றும்” என்று மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா அவர்கள் போட்டி முடிந்து பேசினார்.