சீனாவில் ‘பேட் உமன்’ என அழைக்கப்படுபவர் ஷி ஜெங்லி. இவர் வவ்வால்களிலிருந்து பரவும் நோய்த் தொற்று குறித்து நிறைய ஆய்வுகள் செய்துள்ளதால் இவரை இவ்வாறு சீன மக்கள் அழைக்கின்றனர்.
கொரோனா நோய்த் தொற்று பரவல் துவங்கிய போது இவர் மர்மமான முறையில் காணாமல் போனார். இதனால் இவர் குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்தது.
இந்நிலையில் சமீபத்தில் CGTN எனும் அரசு தொலைக்காட்சியில் தோன்றியவர், கொரோனாவை விட கொடிய நோய்த் தொற்றுகள் வரும் காலத்தில் ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் நேர்காணலில் கூறிய முக்கிய தகவல்களை இங்கு தொகுத்தளித்துள்ளோம்.
“நாங்கள் கண்டுபிடித்த கொரோனா நோய்த் தொற்றை விட இன்னும் அதிக ஆபத்தான நோய்த் தொற்றுகள் உள்ளன என்றும் எச்சரித்தார். புதிய தொற்று நோய்களிலிருந்து மனிதர்களைப்பாதுகாக்க விரும்பினால், காட்டு விலங்குகளால் பரப்பப்படும் பல நோய்த் தொற்றுகளைப் பற்றி அறிந்துகொண்டு ஆரம்ப எச்சரிக்கைகளை கொடுக்க நாம் முன்முயற்சி எடுக்க வேண்டும். தற்போது உலக நாடுகளை கடுமையாக முடக்கியுள்ள கொரோனா நோய் தொற்று என்பது வெறும் ஒரு சிறிய துளி மட்டுமே, இதை விட சக்தி வாய்ந்த பல நோய் தொற்றுகள் நம்மை வருங்காலத்தில் தாக்க வாய்ப்புள்ளது.
இதுபோன்ற அச்சுறுத்தல்களிலிருந்து எதிர்காலத்தில் தப்பித்துக் கொள்ள உலக நாடுகள் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுப்பது அவசியம். நோய்த் தொற்று பரவலை அறிவியல் அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்தப்படுவது உண்மையில் மிகவும் வருந்தத்தக்கது.நோய்த் தொற்றுகளில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகளுக்கு அரசாங்கங்களும் விஞ்ஞானிகளும் தங்கள் கண்டுபிடிப்புகளுடன் வெளிப்படையாக இருக்க வேண்டும், மேலும் ஒத்துழைக்க வேண்டும்.
தற்போது கொரோனா நோய்த் தொற்று பரவல் போன்று அடுத்த தொற்று நோய் பரவலால் மனித இனம் பாதிக்கப்படுவதைத் தடுக்க நாம் விரும்பினால், இயற்கையில் காட்டு விலங்குகளால் பரப்பப்படும் இந்த அறியப்படாத நோய்த் தொற்றுகளைப் பற்றி அறிந்து முன்கூட்டியே எச்சரிக்கைகளை வழங்க வேண்டும். இதுபோன்ற விலங்குகள் தொடர்பில் நாம் ஆய்வு செய்ய தவறினால், கொரோனா நோய்த் தொற்று பரவலை விடவும் கொடிய ஒன்று எதிர்காலத்தில் உருவாக வாய்ப்புள்ளது.
இருப்பினும், இயற்கையில் பல வகையான வவ்வால்கள் மற்றும் பிற வன விலங்குகள் இருப்பதால் , அவை பல வகை நோய்த் தொற்றுகள் பரப்ப வாய்ப்புள்ளது என்பதால், எங்கள் ஆராய்ச்சியைத் தொடரும் என்று ஷி ஜெங்லி நேர்காணலில் தெரிவித்துள்ளார்.