இரண்டு மாதங்களுக்கும் மேல் பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு முறை பொது முடக்கம் நீட்டிக்கப்படும்போதும் சில துறைகளுக்கு, சில இடங்களுக்கு தளர்வு அளிக்கப்பட்டே வந்தது. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முயற்சித்தனர்.
இருந்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முடிதிருத்த நிலையங்கள், அழகு நிலையங்கள் செயல்பட தமிழ்நாடு அரசு தொடர்ந்து அனுமதியளிக்க மறுத்தது. முடிதிருத்த நிலைய தொழிலாளர்கள் அரசுக்கு கொடுத்த தொடர் அழுத்தம் காரணமாக முதலில் கிராமப்புற பகுதிகளிலும் பின்னர் சென்னை தவிர்த்து பிற இடங்களிலும் அனுமதி வழங்கப்பட்டது.
தமிழ்நாட்டிலேயே பாதிப்பு மிக அதிகமாக இருக்கும் சென்னையில் மட்டும் முடிதிருத்த நிலையங்களும், அழகு நிலையங்களையும் திறக்க தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.
பிறகு சென்னையில் இதர கடைகள், தொழிற்சாலைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்ட போதும் சலூன் கடைகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.இரு மாதங்களுக்குப் பின் பொது போக்குவரத்து தொடங்கியது. இந்நிலையில் இன்று ஐந்தாம் கட்ட பொது முடக்கம் அமலுக்கு வரத் தொடங்கியுள்ள நிலையில் சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர பிற இடங்களில் சலூன் கடைகள் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
சுமார் அறுபது நாள்களுக்கு மேல் சென்னையில் சலூன் கடைகள் திறக்கப்பட்டுள்ளதால் மக்கள் காலை முதலே அங்கு படையெடுக்கத் தொடங்கிவிட்டனர். 6 மணிக்கெல்லாம் பல கடைகளில் ஆட்கள் வரத் தொடங்கிவிட்டனர். இருப்பினும் ஒன்றிரண்டு நபர்களை மட்டும் காத்திருக்கவிட்டு மற்றவர்களை குறிப்பிட்ட நேரத்தில் வருமாறு கடை உரிமையாளர்கள் அனுப்பிவிடுகின்றனர்.
மேலும் கடைகளுக்குள் ஏ.சி எந்திரங்கள் இயக்கப்படாது. முகக் கவசம் இல்லாமல் வந்தால் கடைகளுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை, முடித்திருத்துவதற்கு முன்பும் பின்பும் கிருமி நாசினி கொண்டு பணியாளர்களின் கைகள் சுத்தம் செய்யப்படுகிறது.