தமிழக அரசியலில் திடீர் திருப்பம்! நடிகர் விஜய் சீமான் மற்றும் திருமாவளவனுக்கு வாழ்த்து
கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய மக்களவை தேர்தல் ஜூன் 1-ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது. இந்த தேர்தலுக்கு பிறகு பல எதிர்பாராத நிகழ்வுகள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இரண்டும் முறை தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்த பாஜக தற்போது தனி மெஜாரிட்டியை இழந்துள்ளது. இதன் காரணமாக கூட்டணி கட்சிகளின் உதவியுடன் பாஜக தற்போது ஆட்சியமைக்க உள்ளது.
தமிழகத்தில் பாஜக போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது. ஆனாலும் பெரும்பாலான தொகுதிகளில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது. எனினும் இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஏனெனில் தமிழகத்தை பொறுத்தவரையில் திமுக, அதிமுக என்ற இரு பெரும் கட்சிகள் தான் இதுவரை ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் தான் தற்போது இந்த இரு கட்சிகளுக்கு அடுத்தப்படியாக சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி மற்றும் திருமாவளவன் தலைமையிலான விடுதலை சிறுத்தைகள் கட்சியும் உள்ளது. இந்த தேர்தலில் இக்கட்சிகள் பல தொகுதிகளில் அதிக அளவிலான வாக்குகளை பெற்று மாநில கட்சி என்னும் அங்கீகாரத்தை பெற்றுள்ளது.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 8.19% வாக்குகளையும், விடுதலை சிறுத்தைகள் கட்சி 8% வாக்குகளையும் பெற்றுள்ளது. இதன் காரணமாக இந்த கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் சார்பில் மாநில கட்சி அங்கீகாரம் வழங்கப்படவுள்ளது. இந்த தேர்தல் ஆணைய அங்கீகாரத்தை பெற ஒரு கட்சி 8% வாக்குகளை பெற்றிருக்க வேண்டும் என்பது விதிமுறை ஆகும். இதன்படி பார்த்தால் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் நாம் தமிழர் கட்சி 8% சதவீத வாக்களை பெற்றுவிட்டது. மேலும் நாம் தமிழர் 40 தொகுதிகளிலும், விசிக 2 தொகுதிகளும் போட்டியிட்டு இந்த வாங்கு சதவீதத்தை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே இது தொடர்பான விவரங்களை இந்த இரு கட்சிகளும் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். அந்த விவரங்கள் தேர்தல் ஆணையத்தால் சரிபார்க்கப்பட்டு பின்னர் இந்த இரண்டு கட்சிகளுக்கும் மாநில கட்சி அங்கீகாரம் வழங்கப்படும்.
இந்த நிலையில் தான் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், பிரபல நடிகருமான விஜய் சீமான் மற்றும் திருமாவளவன் ஆகிய இருவருக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதனை அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியுள்ளதாவது,
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்களின் நம்பிக்கையைப் பெற்று, மாநிலக் கட்சிகளாக அங்கீகாரம் பெறும் தகுதியை வென்றெடுத்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
தேர்தல் முடிவுகள் வெளியாகி பாஜக ஆட்சியமைக்கும் நிலையிலும், தமிழக அளவில் 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்றுள்ள நிலையிலும் புதியதாக கட்சி ஆரம்பித்துள்ள நடிகர் விஜய் சீமான் மற்றும் திருமாவளவன் உள்ளிட்டவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.