ஜூன் 10 அன்று பள்ளி மாணவர்களுக்கு “ஸ்பெஷல் ஸ்வீட்” வழங்கப்படும் – தமிழக அரசு அறிவிப்பு!!
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மற்றும் ஆண்டுத் தேர்வு முடிந்து கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி கோடை விடுமுறை அளிக்கப்பட்டது.இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக இருந்ததால் பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்படலாம் என்று சொல்லப்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த மே 24 அன்று பள்ளிக் கல்வித்துறையானது பள்ளி திறப்பு தேதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அதில் ஜூன் 06(வியாழன்) பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்தது.
ஆனால் வெயிலின் தாக்கம் குறையாத காரணத்தினால் பள்ளிகள் திறப்பு தேதியை ஒத்திவைக்க வேண்டுமென்று பெற்றோர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.இதை ஏற்ற தமிழக அரசு பள்ளிகள் திறப்பை ஜூன் 10 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது.
இந்நிலையில் பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளில் அரசுப் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழ்நாட்டில் மறைந்த முன்னாள் முதல்வர்கள் பிறந்த நாளன்று அரசுப் பள்ளிகளில் சர்க்கரை பொங்கல் வழங்கப்படுவது வழக்கம்.அந்த வகையில் கடந்த ஜூன் 03 அன்று மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள் கொண்டாடப்பட்ட நிலையில் ஜூன் 10 அன்று பள்ளிகள் திறக்கப்படும் நாளில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சத்துணவு திட்டத்தில் பயன்பெற்று வரும் மாணவர்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.