அமெரிக்க அதிபரின் மகன் குற்றவாளி என தீர்ப்பு

0
210
Joe Biden (ஜோ பைடன்)
Joe Biden (ஜோ பைடன்)

அமெரிக்க அதிபரின் மகன் குற்றவாளி என தீர்ப்பு

துப்பாக்கி வழக்கில் ஜோ பைடனின் மகன் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் அதிபர் பதவியில் இருந்து வருபவர் ஜோ பைடன். அங்கு இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனுக்கும், குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மூத்த மகன் ஹன்டர் பைடன். கடந்த 2018 ஆம் ஆண்டு இவர் சட்டவிரோதமாக துப்பாக்கி வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

அமெரிக்காவை பொறுத்தவரை துப்பாக்கி வாங்குவதற்கு கட்டுப்பாடுகள் ஏதுமில்லை. அங்கு 18 வயது நிறைந்த அனைவரும் சட்டபூர்வமாக துப்பாக்கிகளை வாங்கி வைத்துக் கொள்ளலாம். அப்போது ஒரு விண்ணப்பத்தை மட்டும் பூர்த்தி செய்து கொடுத்தால் போதுமானது.

அதில் துப்பாக்கி வாங்கும் நபரின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் போதைப்பொருள் பயன்பாடு குறித்த சில கேள்விகள் இடம் பெற்றிருக்கும். அவ்வகையில் ஹன்டர் பைடன் 2018 இல் துப்பாக்கி வாங்கும் பொழுது நிரப்பி கொடுத்த விண்ணப்ப படிவம் அவருக்கு எதிராக திரும்பி உள்ளது.

அதாவது அவர் நிரப்பி கொடுத்த விண்ணப்பத்தில் போதைப்பொருள் பயன்பாடு குறித்த கேள்விக்கு போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என தவறான தகவல்களை பூர்த்தி செய்ததாக தெரியவந்துள்ளது. ஆனால் அவர் போதை பொருளை பயன்படுத்தி உள்ளார். மேலும் அந்த துப்பாக்கியை 11 நாட்கள் தன்வசம் வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது.

இது தொடர்பாக கடந்த செப்டம்பர் 2023 ஆம் ஆண்டு அவர் மீது வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. அதில் போதை பொருள் பயன்பாடு தொடர்பாக அமெரிக்க அரசிடம் பொய்க் கூறியது மற்றும் போதைப்பொருள் பயன்படுத்தும் பொழுது துப்பாக்கியை வைத்திருந்த குற்றச்சாட்டுகள் இடம்பெற்றது.

இந்நிலையில், இந்த வழக்கில் இவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முதல் இரண்டு வழக்குகளில் தலா 10 ஆண்டுகள், மூன்றாவது வழக்கில் ஐந்து ஆண்டுகள் என அதிகபட்சம் 25 ஆண்டுகள் வரை ஹன்டர் பைடனுக்கு தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது. தண்டனை குறித்த விவரங்கள் அறிவிக்கப்படவில்லை.

அமெரிக்கா சட்டப்படி குற்றவாளி என அறிவிக்கப்பட்டவருக்கு தண்டனை விவரங்கள் 120 நாட்களுக்குள் வழங்கப்படும். வரும் நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்குள் தண்டனை விவரம் அறிவிக்கப்படும். இது குறித்து பேசுகையில் அமெரிக்க அதிபர் பைடன் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தார். அதே சமயத்தில் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து ஆலோசித்து வருவதாக கூறினார்.