தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 23 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து சென்னை சுகாதாரத் துறையினர், மாநகராட்சி அதிகாரிகளோடு, முதலமைச்சர் எடப்பாடி நேற்று ஆலோசனை மேற்கொண்டார்.
ஜூன் மாதம் 1ம் தேதி ஐந்தாம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டத்தையடுத்து வெளிமாநிலங்களிலிருந்து தமிழகம் வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டது.
இந்நிலையில் விமான பயணத்திற்கான புதிய விதிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், குஜராத், டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து வரும் விமான பயணிகளுக்கு RT-PCR பரிசோதனை கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் “வெளிநாடுகளிலிருந்து விமானம் மூலம் தமிழகம் வரும் அனைவருக்கும் RT-PCR சோதனை கட்டாயமாக்கப்படுகிறது. மேலும், அவர்கள் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர். அதேபோல், மகாராஷ்டிரா, டில்லி மற்றும் குஜராத்திலிருந்து தமிழகம் வருவோருக்கும் RT-PCR சோதனை கட்டாயமாகும்.
மேலும், வணிக பயன்பாட்டுக்காக 48 மணி நேரத்துக்குள் வெளிநாடு சென்று திரும்பியோர் தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள். வெளிமாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு வருவோர் இ-பாஸ் பெற விண்ணப்பிக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.