சமீபக காலமாக தமிழக அரசியலில் திமுக மற்றும் அதிமுக என இரண்டு கட்சிகளும் எதிரெதிராக அரசியல் செய்ததை விட திமுக மற்றும் பாமக என மாறி இரண்டு கட்சிகளும் ஒருவரையொருவர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். உதாரணமாக கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பாமக அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தது பிடிக்காமல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸை தரக்குறைவாக விமர்சனம் செய்தது முதல் இரண்டு கட்சிகளுக்குமிடையேயான பனிப்போர் ஆரம்பித்தது.
இதனையடுத்து நாடாளுமன்ற தேர்தல் வெற்றியை கொண்டாடும் வகையில் திமுகவின் தொண்டர்கள் பாமகவின் சின்னமான மாம்பழத்தை சாலையில் போட்டு மிதித்தது பாமகவினர் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொருமுறையும் எதாவது ஒரு வகையில் திமுகவின் அரசியல் முன்னேற்றத்திற்கு பாமக தடையாக உள்ளது அக்கட்சிக்கு தொடர் பிரச்சனையாக இருந்தது.
இந்நிலையில் தான் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது போது அதிமுகவை விட பாமக திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தது.இது திமுக மற்றும் அதிமுக இடையேயான போட்டி என்பது மாறி திமுக மற்றும் பாமக இடையேயான போட்டி என்ற வகையில் ஒருவருக்கொருவர் கடுமையாக விமர்சித்து கொண்டனர்.
அந்த நேரத்தில் மருத்துவர் ராமதாஸ் திமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையான முரசொலி அமைந்துள்ள நிலம் குறித்து எழுப்பிய மூலப்பத்திர விவகாரம் திமுக தலைமையை நீதிமன்றம் வரை இழுத்து சென்று பொதுமக்கள் மத்தியில் அக்கட்சிக்கு பெருத்த தலைகுனிவை ஏற்படுத்தியது.
இவ்வாறு இருகட்சிகளுக்கு இடையே கடுமையான விமர்சனங்கள் எழுந்துவரும் நிலையில் கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளான இன்று பாமக தொண்டர்கள் அடுத்த சர்ச்சையை கிளப்பியுள்ளனர். அதாவது கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு திமுகவினர் அவருக்கு ஆதரவாகவும், திமுகவின் எதிர்ப்பாளர்கள் கருணாநிதியின் கடந்த கால செயல்பாடுகளை குறை கூறியும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இதில் சமூக வலைத்தளமான ட்விட்டரில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு ஆதரவாக #FatherOfModernTamilnadu என்ற ஹேஷ்டேக்கும், அவருக்கு எதிராக #HBDFatherOfCurruption என்ற ஹேஷ்டேக்கும் தேசிய அளவில் டிரெண்டிங் ஆகி வருகிறது. குறிப்பாக இதில் திமுகவிற்கும் கலைஞர் கருணாநிதியின் கடந்த கால செயல்பாடுகளுக்கும் எதிரான விமர்சனங்கள் பதிவிடப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கலைஞர் கருணாநிதியின் சாதிக்கும்,சமாதிக்கும் இட ஒதுக்கீடு வாங்கி கொடுத்ததே பாமக தான் என்ற பதிவுகளும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதாவது வன்னியர் மக்களுக்கு அங்கீகாரம் வேண்டி வன்னியர் சங்கம் சார்பாக இட ஒதுக்கீடு போராட்டம் நடத்திய போது பல எதிர்ப்புகளையும் தாண்டி MBC என்ற இட ஒதுக்கீடு சட்டம் அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி அவர்களால் கொண்டுவரப்பட்டது. ஒருவகையில் அந்த போராட்டத்திற்கு பலனளித்தாலும் அதில் கருணாநிதி பெரிய சூழ்ச்சியை செய்துள்ளதாக பல ஆண்டுகளாக விமர்சனங்கள் எழுந்து வருகிறது.
அதாவது தமிழகத்தில் பெரும்பான்மையாக உள்ள வன்னியர் சமுதாய மக்கள் இட ஒதுக்கீடு வேண்டி 21 உயிர்களை பலி கொடுத்து போராடினர். இந்நிலையில் அவர்களுக்கு அதில் போதிய அங்கீகாரம் அளிக்காமல் அவர்களுடன் தமிழகத்தில் இருக்கும் 108 சாதிகளுக்கும் சேர்த்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்ற இட ஒதுக்கீடு சட்டத்தை இயற்றியது திமுக. இதன் மூலமாக வன்னியர் சமுதாய மக்களுக்கு கருணாநிதி துரோகம் இழைத்ததாக குற்றசாட்டு உள்ளது. இதில் குறிப்பாக குறைந்த சதவீதமே உள்ள கருணாநிதியின் சமூகத்தையும் இந்த MBC இட ஒதுக்கீடு பட்டியலில் இணைத்து கொண்டார்.
அடுத்ததாக கருணாநிதி மறைந்த பிறகு அவருடைய சமாதிக்காக சென்னை மெரினாவில் இடம் கேட்டு தமிழக அரசை திமுக தலைவர் ஸ்டாலின் அணுகினார். அப்போது மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா சமாதி மெரினாவில் உள்ளதை எதிர்த்து திமுக மற்றும் பாமக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதை காரணம் காட்டி ஆளும் அதிமுக அரசு இடம் வழங்க மறுத்தது.
இதனையடுத்து சூழ்நிலையை உணர்ந்து கொண்டு திமுக சார்பாக தொடரப்பட்ட வழக்கு திரும்ப பெறப்பட்டது. அதே போல மனிதாபினமான அடிப்படையில் பாமக சார்பாக தொடரப்பட்ட வழக்கும் திரும்ப பெறப்பட்டது. இதன் பிறகே கருணாநிதியின் சமாதிக்கு மெரினாவில் இடம் கிடைத்தது. இதன் அடிப்படையில் தான் கலைஞர் கருணாநிதியின் சாதிக்கும்,சமாதிக்கும் இட ஒதுக்கீடு வாங்கி கொடுத்ததே பாமக தான் என பாமக தொண்டர்கள் திமுகவிற்கு சுட்டி காட்டும் வகையில் பதிவிட்டு வருகின்றனர்.