மேகதாது அணை விவகாரம்: தமிழக மக்களுக்கு பாஜகவின் மாபெரும் துரோகம்.. பொம்மை முதலமைச்சரே பேசுங்கள் – எடப்பாடியார் காட்டம்!!
அண்டை மாநிலமான கர்நாடகாவில் காவிரி ஆறுக்கு குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு அம்மாநில அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது.கர்நாடக அரசின் இந்த திட்டத்தால் தமிழகத்திற்கு வரக் கூடிய காவிரி நீர் தடைபட்டு தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் என்பதினால் தமிழகத்தில் இருந்து இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.
இது தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் சோமண்ணா,மேகதாது அணை கட்டுவது தொடர்பாக கர்நாடக மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு மாநில அரசும் பேச்சு வார்த்தை நடத்தி ஒரு முடிவை எட்ட வேண்டுமென்று தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
இதை தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் சோமண்ணாவின் பேச்சுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்திருக்கிறார்.தமிழக மக்கள் மற்றும் விவசாயிகளுக்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் தொடர்ந்து துரோகம் செய்து வரும் நிலையில் மத்தியில் ஆளும் பாஜகவும் இதில் இணைந்து விட்டது.கர்நாடகாவை சேர்ந்த ஒருவரை மத்திய ஜல்சக்தி துறை அமைச்சராக நியமித்ததன் மூலம் தமிழக மக்களுக்கும்,டெல்டா விவசாயிகளுக்கும் மத்தியில் ஆளும் பாஜக + கூட்டணி கட்சிகள் மாபெரும் துரோகத்தை இழைத்திருக்கிறது.
காவிரி ஆற்றுக்கு குறுக்கே மேகதாது அணை கட்டுவது குறித்து மத்தியில் ஆளும் பாஜக அமைச்சர் பேசியிருப்பது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தமிழகத்தை ஆளும் பொம்மை முதலமைச்சர் இதுவரை பேசாமல் இருப்பதற்கான காரணம் என்னவென்று புரியவில்லை.முதல்வரின் இந்த போக்கு மிகவும் கண்டிக்கத்தக்கது என்று எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிக்கை வாயிலாக தனது கண்டனத்தை தெரிவித்திருக்கிறார்.