திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ளவர் ஜெ.அன்பழகன். தன்னுடைய அதிரடியாக அரசியல் வட்டாரத்தில் அறியப்பட்ட இவர், திமுகவின் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளராக உள்ளார்.
கடந்த இரண்டரை மாதங்களாக திமுக தலைவர் ஸ்டாலினின் ‘ஒன்றிணைவோம் வா’ மூலம் கொரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி வந்தார்
இன்று மறைந்த திமுக தலைவர் கருணாநிதி பிறந்த தினத்தை ஒட்டி செய்ய வேண்டிய நலத்திட்ட உதவிகளுக்காக கடந்த மே 29 ம் தேதியே தன் மாவட்ட நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினார்
இந்நிலையில் திடீரென உடல் சோர்வடைந்ததையடுத்து, கொரோனா வழிகாட்டுதல் விதிப்படி கடந்த சில தினங்களாக தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
ஆனால் தொடர்ந்து உடல்நிலை சோர்வடைந்ததையடுத்து திமுக நாடாளுமன்ற உறுப்பினரான ஜகத்ரட்சகனை தொடர்பு கொண்டு, அவருக்கு சொந்தமான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து அவருக்கு பரிசோதனை செய்து பார்த்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அதனால்
உடனடியாக அவர் தீவிர சிகிச்சை பிரிவிற்கு அவரை மாற்றியுள்ளனர்.
மருத்துவக் குழு ஒன்று அவரை பிரத்யேகமாக கண்காணித்து வருகிறது. இந்நிலையில் அவருக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் வென்டிலேட்டர் எனப்படும் செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவருக்கு ஏற்கனவே கல்லீரலில் பிரச்சனை ஏற்பட்டு அதற்கான அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார் என்பதால், அவரை தீவிரமாக கண்காணித்து கூடுதல் கவனமெடுத்து அவருக்கு சிகிச்சை அளித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த தகவல் ஸ்டாலின் சொல்லப்பட, மருத்துவமனைக்கு நேரில் சென்று அவர் உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்ததாக கூறுகிறார்கள்.
விரைவில் அவர் நலமுடன் வீடு திரும்ப பிரார்த்தனை செய்வோம்.