மத்திய பட்ஜெட் தாக்கலுக்கு எதிர்ப்பு! நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!
நேற்று(ஜூலை23) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சிகளை சேர்ந்த அமைச்சர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று(ஜூலை23) பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்னதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இந்த பட்ஜெட் ஏழைகளுக்கான பட்ஜெட்டாக இருக்கும் என்று கூறியிருந்தார்.
இதையடுத்து அவர் கூறியது போலவே 2024 மற்றும் 2025ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ஏழை மக்களுக்கு பல அறிவிப்புகள் வெளியாகி இருக்கின்றது. விவசாயிகளுக்கு உதவும் வகையிலும் பல அறிவிப்புகள் வெளியாகி இருக்கின்றது. இந்நிலையில் மத்திய பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளை சேர்ந்த அமைச்சர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
அதாவது மத்திய பட்ஜெட்டில் பீகார் மற்றும் ஆந்திரா ஆகிய இரண்டு மாநிலங்களுக்கு மட்டும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய பட்ஜெட் ஏற்புடையதாக இல்லை என்றும் குற்றம் சாட்டி வருகின்றனர். இதையடுத்து இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களையும் சமமாக பார்க்க வேண்டும் என்று கூறி நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணியை சேர்ந்த அமைச்சர்கள் தற்பொழுது ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். மேலும் திமுக, சமாஜ்வாதி, ஆர்.ஜே.டி ஆகிய கட்சிகளை சேர்ந்த அமைச்சர்களும் மற்ற எதிர்கட்சிகளை சேர்ந்த அமைச்சர்களும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.