கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த 9 மாற்றுதிறனாளி மாணவ-மாணவிகள் சிறப்பு பேருந்து மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வந்ததன் காரணமாக ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச்சு 23ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. அதே மார்ச் மாதத்தில் பிளஸ்1 மாணவ மாணவிகளுக்கு நடைபெற இருந்த இறுதி தேர்வும், 10ஆம் வகுப்பு பொது தேர்வும் கொரோனா அச்சத்தால் தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது 10ஆம் மற்றும் மீதமுள்ள பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுதேர்வை நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி, தேர்வு எழுத வரும் மாணவ-மாணவிகளுக்கு உரிய போக்குவரத்து வசதி உள்ளிட்ட வற்றையும் நடைமுறைப்படுத்துவதில் பள்ளிக்கல்வித்துறை கவனம் செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 9 மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகள் சென்னை தேர்வு மையத்திற்கு 10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத சிறப்பு பேருந்து மூலம் வழி அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களை வழியனுப்பி வைக்கும் நிகழ்ச்சியானது கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மற்றும் பல்வேறு அரசுத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் சாந்தி, மாணவ மாணவிகளுக்கு இனிப்பு வழங்கி தேர்வை நன்றாக எழுதி வெற்றி பெறுமாறு வாழ்த்தி வழியனுப்பினார். அதேபோல், இந்த பேருந்தில் திருப்பத்தூர், வேலூர், சேலம், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மாணவ மாணவிகளும் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.