நாமக்கல் மாவட்டத்தில் 50 கோடி மதிப்பிலான நிலத்தை மோசடி செய்து பிளாட் போட்ட அதிமுக கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏவின் கணவர் தற்பொழுது அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சிலுவம்பட்டியில் வசித்து வருபவர் எட்டிக்கண். இவருக்கு காதப்பள்ளி கிராமத்தில் சொந்தமாக 5.82 ஏக்கர் நிலம் உள்ளது. இதையடுத்து சிலுவம்பட்டியைச் சேர்ந்த எட்டிக்கண் அவர்கள் திருச்செங்கோடு பகுதியில் உள்ள சீத்தாராம்பாளையத்தில் வசித்து வரும் முத்துச்சாமி என்ற நபருடைய மனைவி சாந்தி அவர்களின் பெயரில் தன்னுடைய 5.82 ஏக்கர் நிலத்தை பவர் ஆஃப் அட்டர்னி செய்து கொடுத்தார்.
பவர் ஆஃப் அட்டர்னி செய்யப்பட்ட 5.82 ஏக்கர் நிலத்தில் முத்துச்சாமி அவர்களின் மனைவி சாந்தி அவர்கள் 8400 சதுர அடி நிலத்தை அதிமுக கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ பொன்.சரஸ்வதி அவர்களின் கணவர் பொன்னுச்சாமிக்கு விற்பனை செய்துள்ளார்.
விற்பனை செய்த சில மாதங்கள் கழிந்து முத்துச்சாமி அவர்களின் மனைவி சாந்தி இறந்துவிட எட்டிக்கண் அவர்கள் சாந்தி மீது எழுதிக் கொடுத்த பவர் ஆஃப் அட்டர்னி ரத்தானது. பவர் ஆஃப் அட்டர்னி ரத்தான காரணத்தால் 5.82 ஏக்கர் நிலமும் மீண்டும் எட்டிக்கண் அவர்களின் பெயருக்கு வந்துவிடும். இதற்கு மத்தியில் அதிமுக கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ பொன்.சரஸ்வதியின் கணவர் பொன்னுச்சாமி அவர்கள் மோசடி செய்து நிலத்தை பிளாட் போட்டு விற்பனை செய்ய முயற்சி செய்தது அம்பலமாகி உள்ளது.
அதாவது சாந்தி அவர்களின் மீது எழுதிக் கொடுத்த பவர் ஆஃப் அட்டர்னி ரத்தானதைத் தொடர்ந்து முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ கணவர் பொன்னுச்சாமி அவர்கள் நிலத்தின் உண்மையான உரிமையாளர்களின் புகைப்படங்களை மாற்றியுள்ளார். அதன் பின்னர் புதிதாக பவர் ஆஃப் அட்டர்னி -யை தயார் செய்த பொன்னுச்சாமி அதை நாமக்கல் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளார்.
இதையடுத்து இந்த நிலத்தை பொன்னுச்சாமி அவர்கள் வீட்டு மனைகளாகப் பிரித்துள்ளார். பின்னர் இதை நாமக்கல் மாவட்டத்தின் நகர ஊரமைப்பு உதவி இயக்குனர் அலுவலகத்தில் பதிவு செய்து வீட்டு மனைகளுக்கு தேவையான டிடிசிபி உரிமம் பெற்றுள்ளார். இதையடுத்து பொன்னுச்சாமி அவர்கள் செய்த இந்த மோசடி எட்டிக்கண் மற்றும் அவருடைய மகன் வேலுச்சாமி இருவருக்கும் தெரியவந்துள்ளது.
தனக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்து வீட்டு மனைகளாக பிரிக்கப்பட்டதை அறிந்து எட்டிக்கண் மற்றும் அவருடைய மகன் வேலுச்சாமி இருவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து எட்டிக்கண் மற்றும் அவருடைய மகன் வேலுச்சாமி இருவரும் நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் போலியான ஆவணங்கள் மூலமாக மோசடி செய்யப்பட்டு போலியான பத்திரப்பதிவு நடைபெற்றுள்ளதாக புகார் அளித்துள்ளனர்.
இதையடுத்து நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் அதிமுக கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ பொன்.சரஸ்வதி அவர்களின் கணவர் பொன்னுச்சாமி உள்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து தலைமறைவான பொன்னுச்சாமி அவர்களை தனிப்படை காவல்துறையின் திருப்பூர் மாவட்டத்தில் வைத்து கைது செய்தனர்.
எட்டிக்கண் அவர்களுக்கு சொந்தமாக சிலுவம்பட்டியில் உள்ள 5.82 ஏக்கர் நிலம் சுமார் 50 கோடி ரூபாய் என்று கூறப்பட்டு வரும் நிலையில் முன்னாள் எம்.எல்.ஏ அவர்களின் கணவர் இது போன்ற மோசடி வேலையில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.