கேட்ட வரத்தை வாரி வழங்கும் கடவுள் முருகப் பெருமானுக்கு தொடர்ந்து 48 நாட்கள் விரதம் இருந்தால் சகல நன்மைகளும் நம்மை வந்து சேரும் என்பது ஐதீகம்.பொதுவாக எந்த ஒரு காரியத்தை தொடங்குவதற்கு முன்னரும் ஒரு மண்டலம் கடைபிடிக்க வேண்டுமென்று சொல்வார்கள்.தமிழ் கடவுள் என்று அழைக்கப்படும் முருகப் பெருமானுக்கு பல வகை விரதங்கள் கடைபிடிக்கப்படுகிறது.
பணப் பிரச்சனை தீர,நோய் குணமாக,குழந்தையின்மை நீங்க,வேலை கிடைக்க,திருமணம் நடக்க முருகப் பெருமானுக்கு விரதம் இருந்தால் உரிய பலன் கிடைக்கும்.சபரிமலை ஐயப்பனுக்கு ஒரு மண்டலம் விரதம் இருப்பது போன்று முருகனுக்கும் 48 நாட்கள் விரதம் இருந்தால் உடல் ரீதியாகவும்,மன ரீதியாகவும் பல நன்மைகள் பெற முடியும்.
ஒரு மண்டலம் என்பது 9 கிரகங்கள்,27 நட்சத்திரங்கள் மற்றும் 12 ராசிகளை உள்ளடக்கியதாகும்.48 நாட்களுக்கு விடாமல் விரதம் இருந்தால் முருகப் பெருமானின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.
48 நாட்கள் விரதம் இருப்பது எப்படி?
இந்த விரதத்தை வளர்பிறை சஷ்டி,விசாகம் அல்லது கிருத்திகை உள்ளிட்ட நாட்களில் தொடங்கலாம்.விரதம் தொடங்கிய நாளில் இருந்து தொடர்ந்து விரதம் முடியும் நாள் வரை தினமும் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து தலைக்கு குளித்து விட்டு நெற்றியில் திருநீறு பூசி கொண்டு பூஜை அறையில் உள்ள முருகப்பெருமானுக்கு விளக்கேற்றி வழிபடவும்.
அதற்கு முன்னர் முருகனின் திருவுருவப் படத்தை சிவப்பு மலர்களால் அலங்கரித்து முருகனுக்கு உகந்த திணை மாவு,தேன் போன்ற நெய்வேத்தியத்தை படைக்க வேண்டும்.விரத வழிபாட்டின் போது கட்டாயம் கந்தசஷ்டி கவசம் படிக்க வேண்டும்.
48 நாட்கள் விரத முறை
விரதம் இருக்கும் 48 நாட்களில் தினமும் ஒருவேளை மட்டும் உணவிற்கு பதில் பால் அல்லது பழம் சாப்பிட்டு விரதம் இருக்கலாம்.இந்த நாட்களில் அசைவ உணவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.பெண்கள் மாதவிடாய் முடிந்த பின்னர் மீண்டும் விரதத்தை தொடங்கலாம்.இந்த 48 நாட்களும் மனத் தூய்மையுடன் விரதம் இருந்தால் முருகனின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.