கல்வியை காவிமயமாக்கும் தீர்மானங்கள்! விசிக எம்பி ரவிக்குமார் விமர்சனம்

0
238
Decisions to make education saffron! Review by VCK MP Ravikumar
Decisions to make education saffron! Review by VCK MP Ravikumar

பழனியில் தமிழக இந்து அறநிலையத்துறை சார்பாக நேற்று முன்தினம் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு தொடக்கி வைக்கப்பட்டது. தமிழக முதல்வர் முக ஸ்டாலின் காணொளி காட்சியின் வாயிலாக இம்மாநாட்டை தொடக்கி வைத்து பேசினார். இதன் பின்னர் மாநாட்டு கொடிகள் ஏற்றப்பட்டது. பின்னர் மாநாட்டு நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மற்ற அமைச்சர்கள் ஐ பெரியசாமி, சக்கரபாணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.மேலும் உயர்நீதிமன்ற நீதிபதிகள், ஆதீனங்கள் மற்றும் அறநிலையத்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இம்மாநாட்டை காண தமிழகம் முழுவதிலிருந்து பக்தர்கள் வந்திருந்தனர். மேலும் சிங்கப்பூர் மற்றும் மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் மாநாட்டின் இரண்டாம் நாளான நேற்று 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் கல்வியை காவி மயமாக்குவதாக இந்த தீர்மானங்கள் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.பி ரவிக்குமார் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளதில் கூறியுள்ளதாவது.

“பழனியில் தமிழ்நாடு அரசின் சார்பில் நடைபெற்ற முத்தமிழ் முருகன் மாநாட்டில் இன்று 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவற்றுள்…

5வது தீர்மானமாக : ” முருக பக்தி இலக்கியங்களை மையப்படுத்தி இந்து சமய அறநிலையத் துறையின் ஆளுகையின் கீழ் உள்ள திருக்கோயில்களின் சார்பில் நடத்தப்படும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குவது என்று தீர்மானிக்கப்படுகிறது.” எனவும்;

8வது தீர்மானமாக : ” விழாக் காலங்களில் அருள்மிகு கந்தசஷ்டி முருகன் திருக்கோவில்களில் மாணவ, மாணவியர்களைக் கொண்டு கந்தசஷ்டி பாராயணம் செய்விப்பது என்று தீர்மானிக்கப்படுகிறது.” எனவும் ;

12வது தீர்மானமாக : ” முருகப் பெருமானின் பெருமைகள் மற்றும் இலக்கியங்கள் குறித்து இந்து சமய அறநிலையத் துறையின் ஆளுகையின் கீழ் உள்ள திருக்கோவில்களின் சார்பில் நடத்தப்படும் கல்லூரிகளில் சிறப்பு ஆன்மிகப் பாடப்பிரிவுகளை ஏற்படுத்த அரசுக்கு பரிந்துரைக்கலாம் என்று தீர்மானிக்கப்படுகிறது.” எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

கல்வியை சமயச் சார்புடையதாக்குதல் என்னும் பா.ஜ.க. அரசின் இந்துத்துவ செயல்திட்டத்தை இது முருகன் பெயரால் செயல்படுத்தும் முயற்சியன்றி வேறல்ல.

இந்து சமய அறநிலையத் துறை தனது துறை சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டால் அதை எவரும் விமர்சிக்கப் போவதில்லை. ஆனால், கல்வித் துறைக்குள் சமயத்தைக் கொண்டுவந்து திணிப்பது சமயச்சார்பின்மை என்னும் அரசமைப்புச் சட்ட நெறிக்கு எதிரானதாகும். இது கண்டனத்துக்குரியது என தெரிவித்துள்ளார்.

திமுகவின் செயல்பாடுகளை அக்கட்சியின் கூட்டணியான விசிக எம்பி விமர்சனம் செய்துள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleRajinikanth : அமைச்சர் துரைமுருகன் பேச்சுக்கு நடிகர் ரஜினிகாந்த் பதிலடி 
Next articleஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு நெஞ்சுவலி