கடந்த ஜூன் 1ம் தேதி முதல் ஐந்தாம் கட்ட ஊரடங்கை அறிவித்த மத்திய அரசு அதில் வழிபாட்டு தலங்களுக்கு தளர்கள் அறிவித்தது.
அதன் படி 8ம் தேதியிலிருந்து கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுடன் கோவில் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களை திறக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. மத்திய அரசின் இந்த விதிமுறையை ஏற்று கேரள மாநிலத்தில் வழிபாட்டு தலங்கள் திறக்கப்படும் என கேரள முதல்வர் அறிவித்திருந்தார்.
இதனையடுத்து நேற்று முதல் (09.06.2020) கேரளாவில் கோவில்கள் திறக்கப்பட்டன.
இந்நிலையில் இந்த மாதம் 14ம் தேதி சபரி மலை நடை திறக்கப்படுவதையடுத்து அதற்கான முன் பதிவு இன்று முதல் துவங்குவதாக திருவாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது.
மேலும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1 மணி நேரத்திற்கு 200 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்க கோவில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. சன்னிதானத்தை பொருத்த வரை ஒரு சமயத்தில் 50 பேர் வரை மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். காலை 4 மணி முதல் 1 மணி வரையும், மாலை 4 மணி முதல் 11 மணி வரையும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். 10 வயதுக்கு குறைவானவர்களும், 65 வயதை கடந்தவர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
சபரி மலையில் தரிசனம் மேற்கொள்ள கேரள காவல்துறையினரின் இணையதளத்தில் முன் பதிவு செய்து கொள்ளலாம். வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் தரிசனம் மேற்கொள்ள கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு நெக்டிவ் என பெற்ற சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் கேரளா செல்வதற்கான இ-பாஸ் பெற வெண்டும்.
வரும் ஜூன் 28 வரை நடை திறக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.