Paralympics Games Paris 2024: பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் தொடரில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் சுமித் அன்டில் தங்கம் வென்று இந்தியாவுக்கு மூன்றாவது தங்கப் பதக்கத்தை பெற்றுக் கொடுத்துள்ளார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி பாராலிம்பிக் போட்டிகள் தொடங்கியது. 17வது பாராலிம்பிக் போட்டிகள் வருகின்ற செப்டம்பர் 8ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
17வது பாராலிம்பிக் தொடரில் உலகம் முழுவதிலும் இருந்து தகுதியான 4400 வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிகாட்டி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்று தங்கம், வெள்ளி, வெண்கலம் பதக்கங்களை பெற்று தங்களுடைய நாட்டுக்கு பெருமை சேர்த்து வருகின்றனர்.
இந்த பாராலிம்பிக் தொடரில் இந்தியாவில் இருந்து 32 பெண்கள் மற்றும் 52 ஆண்கள் என 84 பேர் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். அந்த வகையில் இன்று(செப்டம்பர்3) பெண்களுக்கான ஒற்றையர் பேட்மின்டன் இறுதி போட்டி நடைபெற்றது.
இந்த இறுதிப் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த துளசிமதி அவர்களும் சீனாவை சேர்ந்த யாங் அவர்களும் மோதினர். இதில் இரண்டு வீராங்கனைகளும் சிறப்பாக விளையாடினர். இருந்தும் தமிழகத்தை சேர்ந்த துளசிமதி அவர்கள் 21-17, 21-10 என்ற செட் கணக்கில் சீன வீராங்கனை யாங் அவர்களிடம் தோல்வி அடைந்தார். இருப்பினும் இரண்டாம் இடம் பிடித்த தமிழகத்தை சேர்ந்த துளசிமதி அவர்கள் வெள்ளி பதக்கம் வென்றார்.
அதே போல வெண்கல பதக்கத்திற்கு நடைபெற்ற போட்டியில் தமிழகத்தை சேர்ந்த மனிஷா ராமதாஸ் அவர்கள் டென்மார்க் வீராங்கனை கேத்ரின் ரோசன்கிரன் அவர்களை தோற்கடித்து வெண்கல பதக்கத்தை வென்றார்.
இதையடுத்து ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் சுமித் அன்டில் அவர்கள் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவை சேர்ந்த சுமித் அன்டில் அவர்கள் சுமார் 70.59 மீட்டர் தூரம் எறிந்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
இதன் மூலமாக இந்தியா தன்னுடைய மூன்றாவது தங்கப் பதக்கத்தை பெற்றுள்ளது. மேலும் ஒரே நாளில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என்று மூன்று பதக்கங்கள் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.