விநாயகப் பெருமான் பிறந்த தினம் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது.இந்து மக்கள் விநாயகரை மொத்தம் ஐப்பத்து ஒரு வடிவில் வழிபட்டு வருகின்றனர்.ஆவணி வளர்பிறை சதுர்த்தி நாளான இன்று காலை 11 மணியில் இருந்து மதியம் 1:30 வரை விநாயகருக்கு பூஜை செய்து வழிபடலாம்.
நேற்று வெள்ளிக்கிழமை மதியம் 3 மணிக்கு வளர்பிறை சதுர்த்தி தொடங்கி இன்று மாலை 5:30 மணிக்கு முடிவடைவடைகிறது.ஆனால் சூரியன் அஸ்தவன நாளில் தான் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட வேண்டும்.அதன்படி இன்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தி அன்று அதிகாலையில் எழுந்து நீராடி புத்தாடை அணிந்து வீட்டு பூஜை அறையை மலர்களால் அலங்கரிக்கும் வழக்கம் இந்துக்களிடையே காணப்படுகிறது.பிறகு நல்ல நேரம் பார்த்து விநாயகர் சிலையை வாங்கி வந்து வீட்டின் வடக்கு அல்லது கிழக்கு திசை பார்த்தவாறு வைக்க வேண்டும்.
விநாயகருக்கு உகந்த வெள்ளெருக்கு மாலை,அருகம்புல் மாலையை சூட்டி மலர்களால் அலங்கரிக்க வேண்டும்.பிறகு சந்தனம் மற்றும் குங்குமத்தில் விநாயகருக்கு பொட்டு வைத்து சிறப்பு அலங்காரம் செய்ய வேண்டும்.
விநாயகருக்கு முன் வாழை இலையில் வெற்றிலை பாக்கு மற்றும் கொய்யா,வாழை,ஆப்பிள்,மாதுளை போன்ற பழங்களை வைக்கவும்.பிறகு சர்க்கரை பொங்கல் சுண்டல் செய்து படைக்க வேண்டும்.
மேலும் கொழுக்கட்டை,பொரி,அப்பம்,மோதகம் போன்ற உணவுகளை நெய்வேத்தியமாக படைக்கலாம்.பிறகு குத்து விளக்கு,காமாட்சி விளக்கு,அல்லது மண் விளக்கு இதில் ஏதேனும் ஒன்றில் நெய் அல்லது நல்லெண்ணய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.பிறகு விநாயகருக்கு கற்பூர தீபாரதனை காட்டி மூன்று முறை தோப்புக்கரணம் போட்டு மண்டியிட்டு வழிபட வேண்டும்.விநாயகர் சதுர்த்தியில் இப்படி பூஜை செய்து வழிபட்டால் விநாயகப் பெருமானின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.