நடிகராகவும் இயக்குநராகவும் ஆதி அவர்கள் மீசைய முறுக்கு, நான் சிறித்தால், அன்பறிவு, நட்பே துணை போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் தற்பொழுது ஹிப் ஹாப் தமிழா எண்டர்டெய்ன்மென்ட் என்ற ஒரு தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கி அதன் மூலமாக கடை உலகப் போர் என்ற திரைப்படத்தை ஹிப் ஹாப் தமிழா ஆதி அவர்களே தயாரித்து இயக்கி நடித்துள்ளார்.
இது மட்டுமில்லாமல் இவர் தனியாக இசை கச்சேரி நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். இவரும் இவருடைய நண்பர் ஜீவா என்ற நபரும் இணைந்து ஹிப் ஹாப் தமிழா என்ற நிறுவனத்தை தொடங்கினார். இதன் மூலமாக ரேடியோ மிர்ச்சி வானொலி நிகழ்ச்சியில் கிளப்புல மப்புல என்ற பாடலை பாடினார். அந்த வீடியோ யூடியூப்பில் வைரலாக ஹிப் ஹாப் தமிழா ஆதி பிரபலமடைந்தார். இதையடுத்து நடிகர் ஹிப் ஹாப் தமிழா ஆதி அவர்கள் நேற்று(செப்டம்பர்8) நடத்திய இசை நிகழ்ச்சியில் கைகலப்பு ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை கொடிசியா வளாகத்தில் நடிகரும் இயக்குநரும் இசையமைப்பாளருமான ஹிப் ஹாப் ஆதி அவர்கள் நேற்று(செப்டம்பர்8) இசை நிகழ்ச்சி நடத்தினார். இந்த இசை நிகழ்ச்சியில் வெளிநாட்டு இசை நிகழ்ச்சிகளை போல 300 அடி ரேம்ப் அமைத்து அதில் ஹிப் ஹாப் தமிழா ஆதி அவர்கள் பாடி நடனமாடினார். இந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் ஆடி பாடி மகிழ்ந்தனர்.
இந்நிலையில் ஹிப் ஹாப் தமிழா ஆதி அவர்கள் மேடையில் பாடிக் கொண்டிருக்கும் பொழுது கீழே நடனம் ஆடிக் கொண்டிருந்த மாணவர்களுக்கு மத்தியில் கை கலப்பு ஏற்பட்டது. பயங்கர கைகலப்பு ஏற்பட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கைகலப்பு ஏற்பட காரணமான மாணவர்களை காவல் துறையினர் வெளியேற்றினர்.
இந்நிலையில் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொது மக்கள் “இசை நிகழ்ச்சியில் பாதுகாப்பு மிக மிக குறைவாகத் தான் இருந்தது. கல்லூரி மாணவர்கள் இந்த இசை நிகழ்ச்சிகளில் கூடியதால் பிரச்சனைகள் அதிகமாகி கைகலப்பு ஏற்பட்டது” என்று கூறினர்.