அரசு மாணவர்களுக்கு நீட் தேர்வில் ஒதுக்கீடு – நிறைவேறுகிறதா அவசரச் சட்டம்?

0
137

இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கு நீட் தேர்வு அவசியம் என மத்திய அரசு அறிவித்து அதன்படி தேர்வு நடத்தியே மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளில் இடம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நடைமுறை கிராமப்புற மாணவர்களை குறிப்பாக அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவை கலைக்கும் செயலாக பலராலும் பார்க்கப்பட்டது.

இதனை அடுத்து தமிழக அரசு சட்டப்பேரவையில் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளது. எனினும் கடந்த ஆண்டு மருத்துவ சேர்க்கையில் அரசுப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை என்பது மிக சொற்பமான எண்ணிக்கையிலேயே இருந்தது. இந்த நிலையை மாற்ற தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்து வழக்கு நடைபெற்றுக் கொண்டு உள்ளது.

இதனைத் தொடர்ந்து நீட் தேர்வில் தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் அதாவது கிராமப்புற பள்ளிகளிலோ, நகராட்சி பள்ளிகளிலோ, மாநகராட்சி பள்ளிகளிலோ அல்லது ஆதிதிராவிடர் நல பள்ளிகளிலோ ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயின்ற மாணவர்களுக்கு நீட் தேர்வில் உள் இட ஒதுக்கீடு வழங்க சட்ட முன் வடிவு கொண்டுவரப்பட உள்ளதாக முதல்வர் இன்று சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.

இதற்காக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு ஆணையம் ஒன்று அமைக்கப்படும் அவ்வாணையம் இந்த சட்ட முன் வடிவை கொண்டுவர அரசுக்கு தேவையான தகவல்களை தொகுத்து வழங்கும். அந்த குழுவில் கல்வித்துறை சார்பில் இரண்டு கல்வியாளர்களும் நல்வாழ்வுத்துறை சார்ந்த அதிகாரிகளும், சட்டத்துறை சார்ந்த அதிகாரிகளும் உறுப்பினர்களாக இருப்பர் எனவும் இவ்வாணையம் ஒருமாத காலத்திற்குள் அரசுக்கு அறிக்கை அளிக்கும் எனவும்‌ முதல்வர் பழனிச்சாமி அவர்கள் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்திருந்தார்.

இந்த குழு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டதுடன், சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள், உள்ளிட்டோரிடம் கருத்துகளைப் பெறுவதற்கான கூட்டங்களை நடத்தியது.

இதனையடுத்து சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழு தனது அறிக்கையை சமர்பித்தள்ளது.

அதில், அரசு பள்ளிகளில் பயிலும் கிராமப்புற மாணவர்களுக்கு போதிய நீட் பயிற்சி கிடைக்காதது, பெற்றோரின் கல்வித் தரம், குடும்ப வருமானம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.மேலும், கடந்த ஆண்டு மருத்துவ படிப்பில் சேர்ந்த 66 விழுக்காடு மாணவர்கள் ஒரு முறைக்கு அதிகமாக நீட் தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றிருப்பதையும் கலையரசன் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இதனடிப்படையில், நீட் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 விழுக்காடு உள் இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

விளையாட்டு ஒதுக்கீடு, முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்படுவதைப் போன்று அரசு பள்ளியில் 12ம் வகுப்பு வரை பயின்ற மாணவர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கலையரசன் குழு பரிந்துரையை அரசு ஏற்கும் பட்சத்தில், நீட் தேர்வுக்கு முன்பாக, தனி இட ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

10 % இட ஒதுக்கீடு வழங்கப்படும் பட்சத்தில் மொத்தம் உள்ள ஆறாயிரம் மருத்துவ இடங்களில் 600 இடங்கள் வரை அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நீட் தேர்வை சுமார் 17 ஆயிரம் அரசு பள்ளி மாணவர்கள் எழுத உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleதமிழக வீராங்கனை கோமதியின் தங்கப் பதக்கம் பறிப்பு – 4 ஆண்டுகள் தடை
Next articleஉங்கள் வீட்டிலுள்ள மிக்ஸி பிளேடுகளின் கூர்மை குறைந்துவிட்டதா?? இதோ அதை சார்ப்பாக்க எளிய வழி