திருமலை திருப்பதி தேவஸ்தானம் கோயிலில் வழங்கப்படும் பிரசித்தி பெற்ற பிரசாதமான லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக ஆந்திர மாநிலத்தின் முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்கள் பகீர் தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
ஆந்திர மாநிலம் திருமலையில் திருப்பதி கோயில் அமைந்துள்ளது. ஏழு மலைகளை கொண்ட இந்த திருப்பதியில் ஏழாவது மலையில் இருக்கும் வெங்கடாஜலபதி அவர்களை தரிசனம் செய்ய வெளி மாநிலம் வெளிநாடுகள் என உலகின் பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். திருமலை திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் லட்டு குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்கள் திடுக்கிடும் தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
ஆந்திர மாநிலத்தில் நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்ந்து சட்டமன்ற தேர்தலும் நடைபெற்றது. தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையில் ஆட்சி அமைந்த ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்களின் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகின்றது. சந்திரபாபு நாயுடு அவர்கள் முதல்வராக பதவியேற்ற பின்னர் பல நலத்திட்டங்கள் செயல்படுத்தி வரும் நிலையில் முதல்வர் சந்திரபாபு பதவியேற்று 100 நாட்கள் ஆகியுள்ளது.
இதையடுத்து 100 நாட்கள் கடந்த நிலையில் மங்களகிரி பகுதியில் முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்களின் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்தளுக்கான கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தான். முதல்வர். சந்திரபாபு நாயுடு அவர்கள் திருப்பதி லட்டு குறித்த பகீர் தகவலை கூறியுள்ளார்.
இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்கள் “இதற்கு முன்பு நடைபெற்ற ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியால் திருமலை திருப்பதி கோயிலின் புனிதம் கெட்டுவிட்டது. திருமலையில் பிரசாதமாக வழங்கப்பட்ட லட்டுவை தயாரிக்க ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி கலப்படம் நிறைந்த பொருட்களையே பயன்படுத்தி உள்ளனர்.
லட்டு தயாரிக்க முக்கியமான மூலப்பொருளாக இருப்பது நெய் தான். அந்த வகையில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி ஆட்சியில் கலப்படம் நிறைந்த விலங்குகளின் கொழுப்பு நிறைந்த நெய்யை பயன்படுத்தியுள்ளனர்.
நான் முதல்வராக பதவியேற்ற பிறகு அமைந்த தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் தற்பொழுது திருப்பதியில் வழங்கப்படும் லட்டுவானது தரமான பொருட்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சியில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அனைவருக்கும் தகுந்த தண்டனை வழங்கப்படும்” என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்கள் கூறியுள்ளார்.