கடந்த மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் வழிபாட்டு தலங்கள் அனைத்தும் பக்தர்கள் தரிசனத்துக்கு மூடப்பட்டன.
இதனால் அன்றாடம் கோவில்களுக்கு செல்லும் பக்தர்கள் எப்போது கோவில்கள் திறக்கப்படும் என்ற கவலையிலிருந்தனர். அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் ஐந்தாவது கட்டமாக ஜூன் 1 முதல் அறிவிக்கப்பட்ட ஊரடங்கில், ஜூன் 8 முதல் கோவில்கள் திறப்பதற்கான தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகம் இருப்பதால் இன்னும் கோவில்கள் திறப்பதை பற்றி அரசு இன்னும் முடிவெடுக்காத நிலையில் அண்டை மாநிலமான ஆந்திராவில் 9ம் தேதிகள் முதல் கோவில்கள் திறக்க அம்மாநில அரசு உத்தரவிட்டது.
ஆந்திராவை பொருத்துவரை பெரும்பான்மையான கோவில்கள் திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. கோவில்களை திறக்க அரசு அனுமதித்த நிலையில் கோவில் பணியாளர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் திருப்பதி தேவஸ்தானத்தை சேர்ந்த காளஹஸ்தியில் அமைந்துள்ள சிவன் கோவிலில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 71 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவுகள் வெளியானது.
அதில் அர்ச்சகர் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளது உறுதியானது. இதனையடுத்து காளஹஸ்தி கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கும் முடிவை தள்ளி வைத்தது தேவஸ்தானம்.