திமுக தலைவரின் மகனும், அக்கட்சியின் இளைஞரணி செயலாளருமாக இருக்கும் உதயநிதி ஸ்டாலின், நேற்று காலை மறைந்த ஜெ அன்பழகன் குறித்த தகவலை ‘தலைவருக்குப் பிடித்த தளபதி’ எனும் தலைப்பில் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அவரின் பகிர்விலிருந்து :
அதில் அன்பழகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து இறப்பு வரை என்ன நடந்தது என்பதைக் குறிப்பிட்டுள்ளார்.
எத்தனையோ மனிதர்களை, அவர்களின் மரணங்களை நாம் கடந்து வந்திருப்போம். ஆனால் சிலரின் மரணம் நம்மை உலுக்கி எடுத்துவிடும். ‘அன்பு’ அண்ணனின் மரணம் அந்தவகை. ஏனெனில் அண்ணன் அப்படிப்பட்ட மனிதர்.
எனக்கே இப்படியென்றால் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக அவருடன் இணைந்து பயணித்த தலைவர் அவர்கள் எப்படித் துடிக்கிறார் என்பதை அருகிலிருந்து பார்த்து துயருறுகிறேன். ஏனெனில் இருவருக்குமான நட்பு மிகவும் ஆத்மார்த்தமானது, அலாதியானது. யாருக்காகவும் எவருக்காகவும் ஒருவர் மற்றவரை விட்டுக்கொடுத்ததேயில்லை.
அந்த பிணைப்புதான், அண்ணனை மருத்துவமனையில் சேர்த்த நாளிலிருந்து தலைவருக்குத் தூக்கம் தொலைய வைத்தது. இந்த 10 நாட்களாக அறிவாலயம், வீடு… என்று தலைவர் எங்குப் போனாலும் அவரின் உள்ளமெங்கும் ‘அன்பு… அன்பு… அன்பு என்று அண்ணன் மட்டுமே நீக்கமற நிறைந்திருந்தார்.
தினமும் மதியம் ஒரு மணிநேரம் ஓய்வெடுப்பது தலைவர் அவர்களுக்கு வழக்கம். கடந்த 10 நாட்களாக அதையும் மறந்தார். ‘ஜெகத் அண்ணனுக்கு போன் பண்ணு. டாக்டர் ரேலாவுக்கு போன் அடி. டாக்டர் இளங்குமரன் என்ன சொன்னாரு. ஐ.சி.எம்.ஆர்-ல ராசா பேசுறேன்னு சொன்னாரே, பேசிட்டாரானு பாரு. ஐதராபாத்ல இருந்து டாக்டர் சௌந்தரராஜன் மருந்து அனுப்புறேன்னு சொன்னார், அனுப்பிட்டாரானு பாரு. தராசு ஸ்யாம் என்ன சொன்னார், அவர்ட்ட பேசினியா? ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்ஸோட தம்பி டாக்டர் சுவாமிநாதன் சென்னை வந்துட்டாரா? நான் வேணும்னா அமைச்சர் விஜயபாஸ்கர்ட்ட பேசவா? அன்புவோட பையன் ராஜாட்ட பேசினியா, போன் பண்ணு. அப்படியே பேசிட்டு என்கிட்ட கொடு…’ அண்ணன், தலைவரின் மனதுக்குள் புகுந்து அவரை தூங்கவிடாமல் செய்துகொண்டிருக்கிறார் என்பது புரிந்தது.
‘அண்ணன் நல்லாயிடுவார். அவரை நல்லா கவனிச்சுக்கிறாங்க. குணமாகிடுவார்’ என்று தலைவரை நாங்கள் தேற்றியபடி இருந்தோம். அண்ணன் மீண்டு வந்துவிடுவார் என்று தலைவரும் முழுமையாக நம்பினார். ‘சின்ன வயசிலிருந்தே அவனை எனக்குத் தெரியும். அவன் அழுத்தக்காரன். வந்துடுவான் பாரு. அவனுக்குக் கட்சியையும், என்னையும் விட்டா வேறொண்ணும் தெரியாதுடா. பாரேன் என்னைப் பார்க்க வருவான் பாரு’ என்று சொல்லிக்கொண்டே இருந்தார்.
அதற்கேற்றாற்போல் இரு தினங்களுக்கு முன் அவருக்குச் செலுத்தப்படும் செயற்கை சுவாசம் குறைக்கப்படுகிறது என்று தகவல் வந்தது. தலைவரிடம் பேசிய மருத்துவர்கள். ‘நல்லா போராடுறார். அவரது உடல் மருந்தை ஏத்துக்குது’ என்றனர்.
‘நான்தான் அவன் வந்துடுவான்னு சொன்னேன்ல. அவன் பயங்கர போல்டு’ என்று தன்னைத்தானே தேற்றிக்கொண்டு எங்களையும் தேற்றினார். அன்பு அண்ணன் தேறி வருகிறார் என்று தெரிந்த அந்த நாளிலிருந்து தலைவருக்குள் அவ்வளவு உற்சாகம்.
‘நீ உடம்பை பார்த்துக்க, வெளியில அலையாத’னு சொன்னதுக்கு, ‘செக்கப்லாம் முடிச்சிட்டு டாக்டர் அனுமதியோடத்தான் போறேன். நீங்க ஏன் இந்த வெயில்ல கிடந்து அலையிறீங்க. வேலை செய்றதுக்குத்தான் நாங்க இருக்கோமே. போய் ரெஸ்ட் எடுங்க’னு எப்பவும் போல எனக்கு அவன் அட்வைஸ் பண்ணிட்டு இருந்தான். இதுக்குத்தான் அவன்ட்ட படிச்சுபடிச்சு சொன்னேன். அவன் குணமாகி வந்ததும், ‘நீ ஒருங்கிணைக்கிற வேலையை மட்டும் பார். ஃபீல்டுக்கு போகாத’னு கண்டிச்சு சொல்லிடணும்’ – அண்ணனுக்கான அறிவுரைகள் வரை தலைவர் தயார் செய்துவைத்துவிட்டார்.
ஆனால் இருவரின் நட்பையும் அன்பையும் அறியாத அந்த கொரோனா உண்மையில் கொடூரமானதுதான். சீராக இருந்த அண்ணனின் உடலியக்கம், கடந்த இரண்டு நாட்களாகச் சீரற்று இயங்கியது. டயாலிசிசிஸ் தொடங்கினர். ‘கவலைக்கிடம்’ என்று செய்திகள் வரத்தொடங்கின. ‘இப்பவே ஹாஸ்பிடலுக்கு போயிடலாம்’ என்று தலைவர் கிடந்து தவித்தார். ‘இப்ப வேணாம். காலையில் வாங்க’ என்றனர் மருத்துவர்கள்.
விடியவிடிய தலைவர் உறங்கவேயில்லை. யார் யாரிடமோ போனில் பேசினார். எப்போது விடியும் என்று காத்திருந்தவர் அதிகாலையிலேயே கிளம்பிவிட்டார். தேறி வந்துவிடுவார் என்று தேற்றிக்கொண்டிருந்த நாங்கள் தலைவருக்கு ஆறுதல் சொல்ல வேண்டிய இடத்தில் நின்றோம். ஆம், மருத்துவமனைக்குச் சென்ற ஒருமணி நேரத்துக்குப்பிறகு அண்ணன் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார் என்ற செய்தி வந்தது. அதைக் கேட்டு மருத்துவமனையிலேயே தலைவர் கதறி அழுததைப் பார்த்து நாங்களும் கலங்கிவிட்டோம்.
யோசிச்சுப்பார்த்தேன். கழகத்தில் எத்தனையோ பேர் உடல் நலிவுற்றிருக்கிறார்கள், இறந்திருக்கிறார்கள். அதற்கெல்லாம் தலைவர் மனதார வருந்துவார். அவர்களுக்கு ஓடி ஓடி உதவுவார். ஆனால் அவர் இப்படிக் கலங்கி நின்றதை இப்போதுதான் பார்க்கிறேன். அதற்குஇளம் வயதிலிருந்து இப்போதுவரை தொடர்ந்த இணைபிரியாத அந்த நட்புப் பயணம்தான் காரணம்.
சரியாகச் சொல்வதென்றால் அப்போது தலைவர் கலைஞர் அவர்களுக்கும் அன்பு அண்ணனுக்கும்தான் அதிக நெருக்கம். அதுவும் சிறைவாசியை சந்திக்கும் பார்வையாளர்களாகப் பழகி பிறகு ஒருவர் மற்றவர் மீது கொண்ட அன்பால் அமைந்த பிணைப்பு. அப்போது தலைவர் அவர்களும் முரசொலி மாறன் மாமா அவர்களும் மிசாவில் கைதாகி சென்னை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். அவர்களைப் பார்க்கக் கலைஞர் அவர்கள் அடிக்கடி சிறைக்குச் சென்று வருவார். அப்போதுதான் அந்த இளைஞனும் மிசா சிறைவாசியான தன் தந்தையைப் பார்க்கச் சிறைக்கு வரத்தொடங்குகிறார். அப்படி வந்த அந்த இளைஞர்தான் அண்ணன் அன்பு. அந்த சிறைவாசி அவரின் தந்தை தி.நகர் பழக்கடை ஜெயராமன் அவர்கள்.
பார்வையாளர்கள் அறையில் அமர்ந்து அன்பு அண்ணனைப் பக்கத்தில் இருத்தி கலைஞர் வெகுநேரம் பேசிக்கொண்டு இருப்பாராம். அவரின் பேச்சு, நடவடிக்கை பிடித்துப்போய் அண்ணனைப் பரபரப்பு அரசியலுக்குள் இழுத்து வந்திருக்கிறார் கலைஞர்.
அதைத்தொடர்ந்து அண்ணனின் உழைப்பால் இளைஞரணியின் தி.நகர் பகுதி அமைப்பாளர் பொறுப்பு கிடைத்தது. பிறகு தி.நகர் பகுதிக் கழக செயலாளர். பிறகுதான் ஒருங்கிணைந்த சென்னை தெற்கு மாவட்டக் கழக செயலாளர். தெற்கை இரண்டாக பிரித்தபோது மேற்கு மாவட்டக் கழக செயலாளராக இருந்தார். இப்படித் தொடர்ந்து 15 ஆண்டுகளாக மாவட்டக் கழக செயலாளர் பொறுப்பிலிருந்தார். மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.
கழகப் பணி, மக்கள் பணி இரண்டிலும் மிகச்சிறந்த களப்பணியாளர். ஒருங்கிணைப்பில் அசரடிப்பார். பொதுக்குழுவா, மாநாடா, போராட்டமா, பொதுக்கூட்டமா… ‘அன்புகிட்ட சொல்லுங்கய்யா, டக்குனு முடிச்சிடுவான்’ என்று கலைஞரின், தலைவரின் கண்கள் அண்ணனைத்தான் முதலில் தேடும். அண்ணனும் தலைமையின் நம்பிக்கையை ஒருமுறைகூட பொய்யாக்கியதில்லை.
குணமிருக்கும் இடத்தில்தானே கோபமிருக்கும். அது கழகம், தலைமையின் மீது கொண்ட பிடிப்பால் வரும் தார்மீகக் கோபம். சிலர் சின்ன விஷயத்துக்குக்கூடத் தலைவரை ஏகத்துக்கும் புகழ்வதை நானே கண்கூடாய் கவனித்திருக்கிறேன். ‘சரி, விஷயத்துக்கு வாங்க’ என்பதுபோல தலைவரும் காத்திருப்பார். தலைவரின் மனது வருத்தப்படக்கூடாது என்பதற்காக வார்த்தைகளை வெட்டி, ஒட்டி பேசுபவர்களையும் பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த வெட்டல், ஒட்டல் அண்ணனுக்கு எப்போதும் ஆகவே ஆகாது, தெரியவும் தெரியாது. நேரடியாக விஷயத்துக்கு வந்துவிடுவார்.
கலைஞர், தலைவருடனான கலந்துரையாடலில் அண்ணன் இருந்தாலே, ‘அன்பு இன்னைக்கு என்ன பேச காத்திருக்கானோ’ என்று மற்றவர்கள் பதறுவார்கள். சீனியர், ஜூனியர் பேதம் பார்க்கமாட்டார். ஆரம்பத்திலேயே அடித்து ஆட ஆரம்பித்துவிடுவார். ‘நீங்க ஏங்க உண்மையை மறைச்சுப் பேசுறீங்க. இங்கபாருங்க தலைவரே, பாசிடிவா சொல்லி உங்களை ஏமாத்திட்டு இருக்காங்க. ஆனா இதுதான் நிஜம். என்மேல உங்களுக்கு கோபம் வரும். அது பிரச்னையில்லை. இதுல விசாரிச்சுட்டு முடிவெடுங்க’ என்று போறபோக்கில் உண்மைகளை உருட்டிவிடுவார். இவர் ஒரு விஷயத்தைப் பேசுகிறார் என்றால் அதில் நியாயம் இருக்கும், நீதி கிடைக்கும்.
அதேபோல ட்ரெண்டிங்கான மனிதர். இளமையாகச் சிந்திப்பார். நிறைய வாசிப்பார். சமூக வலைத்தளத்தில் தீவிரமாக இயங்கியவர். கிரிக்கெட் காதலர். கலைஞர், தலைவரின் பிறந்த நாளில் பல பிரம்மாண்ட கிரிக்கெட் போட்டிகளை நடத்திக்காட்டியவர். நாங்கள் இளைஞரணியின் சார்பில் தமிழகம் தழுவிய ‘தலைவர் கிரிக்கெட் லீக்’ போட்டி தொடங்கியபோது அண்ணனிடம்தான் யோசனை கேட்டேன். ‘நீ நடத்து, எந்த உதவினாலும் பண்றேன்’ என்றார். இறுதிப்போட்டியைக்கூட அண்ணனின் மாவட்டத்தில் நடத்துவதாகத்தான் திட்டமிட்டிருந்தோம்.
சினிமா மீதும் மிகுந்த ஆர்வம் உள்ளவர். நான் சினிமாவுக்கு வர அண்ணனும் ஒரு காரணம். நானும் அண்ணனும் இணைந்து ஒரு படத்தை தயாரிப்பதாக இருந்தது. அந்த முயற்சியின் வழியாக வந்தடைந்ததுதான் ‘ரெட் ஜெயின்ட்’ தயாரிப்பு நிறுவனமும், ‘குருவி’ திரைப்படமும். நான் இளையவன். ஆனால் அண்ணன் ஒருநாளும் எனக்கு அறிவுரை சொன்னதில்லை. காரணம் பிறர் அறிவுரை சொல்லக்கேட்பது அண்ணனுக்கும் பிடிக்காதென நினைக்கிறேன். ‘நாம் சரியாக இருக்கிறோம்’ என்ற தன்னம்பிக்கை. அந்த நம்பிக்கைதான் அண்ணனை நாம் ரசிக்கும் அதிரடிக்காரராய் இயங்க வைத்தது என்று நம்புகிறேன்.
எனக்கு இளைஞரணி செயலாளர் பொறுப்பு வழங்கியபோது ஏகப்பட்ட விமர்சனங்கள். ‘கழகம், அவரின் சினிமா புகழைப் பயன்படுத்திக்கொள்வதில் என்ன தவறு. வேலை செய்து தன்னை நிரூபிக்க அவருக்கு நேரம் கொடுங்க’ என்று என் மீதான விமர்சனங்களுக்கு தொடர்ந்து அதிகமாகப் பதிலளித்து வந்தவர்.
இளைஞரணியின் உறுப்பினர் சேர்க்கை முகாமைக்கூட அண்ணனின் மாவட்டத்தில் ஆயிரம் விளக்கு தொகுதிக்குட்பட்ட இடத்தில்தான் தொடங்கினோம். இப்படி இளைஞரணி நிகழ்ச்சிகள் எதுவாக இருந்தாலும் அண்ணனின் மாவட்டத்தில் துவங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தோம். கொரோனா நலத்திட்ட உதவிகள் வழங்குவதில்கூட நானும் அண்ணனும் சேர்ந்து பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டோம்.
நான் இளைஞரணி பொறுப்புக்கு வரும் முன் கலைஞர் பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ளப் பல மாவட்டச் செயலாளர்கள் என்னிடம் தேதி கேட்டிருந்தனர். ‘இப்படி கேட்குறாங்க. யாருடைய மாவட்ட நிகழ்ச்சியில் கலந்துகொள்வது’ என்று தலைவரிடம் கேட்டேன். ‘யாரெல்லாம் கேட்டிருக்காங்க’ என்ற தலைவர், ‘அப்படின்னா முதல்ல அன்பு கூப்பிடுற நிகழ்ச்சிக்கு போயிடு. போகலைனா அவன் கோவிச்சுப்பான். அதன்பிறகு மத்தவங்களுக்கு போ’ என்றார். இதுதான் அன்பு அண்ணனின் பலம். ஏனெனில் அண்ணனின் அந்தக் கோபத்தில் உண்மை இருக்கும்.
உண்மையைச் சொல்வதென்றால் அன்பு அண்ணன்தான் தளபதி. ஆம், கலைஞர், தலைவருக்குப் பிடித்த தளபதி.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.