இந்தியாவில் சாலை விதிகள் கடுமையாக்கப்பட்டாலும் விபத்துகள் மட்டும் குறைந்தபாடில்லை.நாளுக்கு நாள் சாலை விபத்துக்கள் அதிகரித்த வண்ணமே உள்ளது.குறிப்பாக இருசக்கர வாகன விபத்துகள் அதிகம் நடைபெறுகிறது.இதற்கு முக்கிய காரணம் வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியாதது தான்.
இரு சக்கர வாகனத்தில் இருவர் மட்டுமே பயணிக்க வேண்டும்.வாகன ஓட்டி மட்டுமல்ல பின்னால் அமரும் நபரும் தலைக்கவசம் அணிய வேண்டுமென்று போக்குவரத்து காவலர்கள் அறிவுறித்தினாலும் மக்கள் அதை பின்பற்றுவதில்லை.இதனால் பெரும்பாலான உயிரிழப்புகள்
ஹெல்மெட் அணியாததால் தான் ஏற்படுகிறது.
இந்நிலையில் ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.அந்தவகையில் ஹெல்மெட் அணிவதை ஊக்குவிக்கும் விதமாக காரைக்கால் மாவட்ட நிர்வாகம் புதிய விழிப்புணர்வு முயற்சியை கையில் எடுத்திருக்கிறது.
காரைக்காவலன் என்ற செயலியை அறிமுகப்படுத்தி இருக்கும் காரைக்கால் மாவட்ட நிர்வாகம் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் அரசு ஊழியர்கள் குறித்து அதில் புகார் தெரிவிக்கலாம் என்று பொதுமக்களுக்கு அறிவித்திருக்கிறது.இது பொதுமக்களுக்கு ஹெல்மெட் அணிவதை ஊக்குவிக்கும் வகையில் இருக்கிறது.
அது மட்டுமின்றி காரைக்கால் மாவட்டத்தில் நடக்கும் குற்றச் செயல்கள்,போக்குவரத்து விதி மீறலில் ஈடுபடுதல் போன்றவற்றை ஆதாரத்துடன் காரைக்காவலன் செயலியில் புகார் அளிக்கலாம்.இதன் மூலம் பெரும்பாலான குற்றச் செயல்கள் தடுக்கப்படும் என்பதால் பொதுமக்கள் இடையே இந்த செயலிக்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.