கவிஞர் பா. விஜய் அவர்கள் இலக்கணப் பிழையோடு எழுதிய பாடலுக்கு தேசிய விருதினை வென்றுள்ளார்.
தேசிய விருது என்பது தமிழ் சினிமாவில் பலருக்கு இன்றளவும் எட்டாத கனியாகவே இருந்து வருகிறது. இதில் சிலரே விதிவிளக்காக உள்ளனர். அவ்வாறு தேசிய விருதினை வென்றவர் தான் கவிஞர் பா விஜய் அவர்கள்.
முதன் முதலில் கவிஞர் கண்ணதாசனே ஒரு பாடலுக்கான தேசிய விருதினை வென்றவர் ஆவர். மேலும் அவர் “குழந்தைக்காக” என்ற படத்தில் வரும் “தேவன் வந்தான்”என்ற பாடலுக்காக தான் இவ்விருதினை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கவிஞர் கண்ணதாசனை அடுத்து வைரமுத்து இதுவரையில் 7 தேசிய விருதுகளை பெற்று, அதிக தேசிய விருதுகளை பெற்ற பாடல் ஆசிரியர் என்ற பெருமையை தன்னகத்தே கொண்டுள்ளார்.
வைரமுத்து “முதல் மரியாதை, ரோஜா, கருத்தம்மா, பவித்ரா, சங்கமம், கன்னத்தில் முத்தமிட்டால், தென்மேற்கு பருவக்காற்று” உள்ளிட்ட படங்களில் வரும் பாடல்களுக்காக தேசிய விருதினை வென்றார்.
கண்ணதாசன், வைரமுத்து, நா முத்துக்குமார் இவர்களை தொடர்ந்து பாடல் ஆசிரியராக தமிழ் சினிமாவில் தேசிய விருதினை வென்றவர் பா விஜய் அவர்களே.
இவர் கடந்த, 2004 ஆம் ஆண்டு சேரன் நடிப்பில்
வெளிவந்த “ஆட்டோகிராப்” படத்திற்கு எழுதிய பாடல் மூலம் தேசிய விருதினை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. நம் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்த “ஒவ்வொரு பூக்களுமே” என்ற பாடலுக்காக தான் பா. விஜய் அவர்கள் தேசிய விருதினை வென்றார்.
பா விஜய் எழுதிய இப்பாடலில் இலக்கணப் பிழை உண்டு என்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இப்பாடலில் வரும் ஒவ்வொரு பூக்களுமே என்னும் முதல் வரியே இலக்கணப் பிழையோடு எழுதப்பட்டது தான். ஒவ்வொரு என்பது ஒருமையை குறிப்பது, பூக்களுமே என்பது பன்மையை குறிப்பதாகும். இப்பாடல் வரியானது “ஒவ்வொரு பூவுமே” என அமைந்தால் மட்டுமே இதில் இலக்கண பிழை இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.