நேற்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தலைமையில் முதல் மாநாடு நடைபெற்றது.
நேற்று நடந்த நிகழ்வுகளில் நாடு முழுவதும் ட்ரெண்டான ஒரு செய்தி என்றால் அது தமிழக வெற்றிக்கழக மாநாடு தான். லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் அதன் தலைவர் விஜய் கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசுகையில் ஒரு மன்னர் காலத்து கதையை கூறியிருந்தார். அதில் ஒரு நாட்டில் பெரிய போர் வந்ததாம். அப்போது சக்தி வாய்ந்த தலைமை இல்லாததால் ஒரு பச்சை பிள்ளை கையில் தான் நாட்டின் முழு பொறுப்பும் இருந்ததாம். இதனால் அந்த நாட்டின் பெரிய தலை எல்லாரும் பயந்தார்கள். அதற்கேற்றார் போல் அந்த சின்ன பையனும் படையை திரட்டி போருக்கு போகலாம் என்றானாம். அதற்கு அந்தப் பெருந்தலைகள் நீ மிகவும் சின்ன பையன். அங்கு நிறைய எதிரிகள் இருப்பார்கள் களத்தில் அவர்களை சந்திப்பது சாதாரண விஷயம் இல்லை.
இது ஒன்றும் விளையாட்டு கிடையாது. போரில் ஜெயிக்க வேண்டும். எந்தத் துணையும் இல்லாமல் நீ எவ்வாறு வெற்றி பெறப் போற எனக்கேட்டபோது, அந்த சிறுவன் பதில் சொல்லாமல் தனியாக தன் படையுடன் சென்று என்ன செய்தான் என்று சங்க இலக்கியத்தில் தெளிவாக கூறியுள்ளனர். அதனை படிக்காதவர்கள், படித்தோ அல்லது கேட்டோ தெரிந்து கொள்ளுங்கள். கெட்ட பையன் சார்… அந்த சின்ன பையன் என விஜய் கூறியிருந்தார்.
இதனையடுத்து விஜய் சொன்ன அந்த குட்டி கதையில் உள்ள பாண்டிய மன்னர் யார்?? என நெட்டிசன்ஸ் இணையதளத்தில் தேடினர். அப்போது பாண்டிய மன்னர் நெடுஞ்செழியன் தான் அந்தப் புகழுக்கு உரியவர் என தெரியவந்துள்ளது. கடுகு சிறுத்தாலும், காரம் குறையாது என்பதைப் போல தனது வீரத்தாலும் சாமர்த்தியத்தாலும் போரிட வந்தவர்களை சின்னஞ்சிறு வயதிலேயே தோற்கடித்தவர் பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் என வரலாற்றில் கூறப்பட்டுள்ளது.
பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் தந்தை இறப்பிற்கு பின்னர் சிறுவயதிலேயே முடி சூட்டப்பட்ட சங்க கால பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த மன்னர். இவர் தலையாலங்கானத்து போருக்கு செல்லும் பொழுது சிறுவர்கள் அணியும் ஐம்படை தாலியை கழுத்தில் இருந்து கழட்டாமலேயே சென்றார் என்பதை வைத்து இவர் சிறுவயதிலேயே போருக்கு சென்றவர் என்பது புலப்படுகிறது.
மேலும் சோழ நாட்டை ஆண்ட பெருநற்கிள்ளி, சேர நாட்டை ஆண்ட மாந்தரஞ்சேரல் இரும்பொறை, கொங்கு நாட்டினை ஆண்ட திதியன், எழினி, எருமையுரான், இருங்கோவேள், பொருநன், போன்ற மன்னர்கள் மன்னன் நெடுஞ்செழியன் இளையவன், வயது முதிராதவன், ஆற்றல் இல்லாதவன், என இகழ்ந்து கூறினர். இவர்கள் அனைவரும் பாண்டிய நாட்டின் மீது போர் தொடுத்து தலையாலங்கனம் என்ற இடத்தில் பாண்டிய மன்னனை சந்தித்தனர். அதில் அவர்களை எதிர்கொண்ட பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் அனைவரையும் தோற்கடித்து அவர்களின் செருக்கினை அழித்தார் என்று வரலாறு கூறுகிறது.
இந்த கதையை தான் விஜய் அவர்கள் மாநாட்டில் சொல்லி இருந்தார்.