Tenkasi: பொதிகை எக்ஸ்பிரஸ் செல்லும் தண்டவாளத்தில் 10 கிலோ எடை கொண்ட கல் வைத்து ரயிலை கவிழ்க்க மர்ம நபர்கள் முயற்சி.
தீபாவளி பண்டிகையின் போது மக்கள் அனைவரும் ரயிலில் செல்வார்கள் என எண்ணி மர்ம நபர்கள் சதியில் ஈடுபட்டுள்ளனர். நேற்றைய தினம் செங்கோட்டையில் இருந்து சென்னை நோக்கி பொதிகை விரைவு ரயில் கடையநல்லூர் போகநல்லூர் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கு ரயில் தண்டவாளத்தில் சுமார் 10 கிலோ எடை கொண்ட கல் ஒன்றை வைத்துள்ளார்.
அதை பார்த்த ரயிலின் லோகோ பைலட் சாமர்த்தியமாகச் செயல்பட்டு, ரயிலை நிறுத்தி, தண்டவாளத்தில் இருந்த பெரிய கல்லை அப்புறப்படுத்தினார். இதனால் அங்கு ஏற்பட வேண்டிய பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. அந்த கல்லை அகற்றிய பின், ரயில் சில நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டது. இதுகுறித்து ரயில்வே உயர் அதிகாரிகள் உடனடியாக தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு சென்று விசாரணையை தொடங்கினர்.
இதை தொடர்ந்து அங்கு ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம் 26-ம் தேதி இதே கடையநல்லுரில் பொதிகை விரைவு ரயில் சென்ற தண்டவாளத்தில் கல்லை வைத்த சம்பவத்தில் இருவரை ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது. அது மட்டும் அல்லாமல் திருவள்ளூர் மாவட்டத்திலும் தண்டவாளத்தில் போல்ட் மற்றும் நட் கழற்றி விடப்பட்டுள்ளது.
அதனால் இரண்டு ரயில்கள் மோதிக் கொண்டன. இது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகிறது. அது மட்டும் அல்லாமல் அந்த பகுதியில் சந்தேகத்துடன் யாராவது சென்றார்களா அல்லது ஏதேனும் வாகனங்கள் வந்ததா என்பதற்கான விசாரனையும் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.