கடந்த வாரம் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. மாநாட்டில் கலந்து கொண்டு நடிகர் விஜய் பேசியது தமிழக அரசியலில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியது. அதே போல அவர் மாநாட்டு பேனரில் வைக்கப்பட்ட தலைவர்களின் படங்கள் தமிழக அரசியலில் புதுமையை புகுத்தியுள்ளது.
ஏற்கனவே இருக்கும் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் மட்டுமின்றி புதியதாக ஆரம்பிக்கும் கட்சிகள் கூட பெரியார், அம்பேத்கார் படங்களை மட்டுமே வைத்திருந்த நிலையில் தவெக சார்பில் வைக்கப்பட்ட பேனரில் வீரமங்கை வேலு நாச்சியார், காமராஜர், அஞ்சலையம்மாள் உள்ளிட்ட தலைவர்கள் படம் இடம் பெற்றிருந்தது. இதில் மற்ற தலைவர்கள் பற்றி தமிழக மக்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பிருக்கும் நிலையில் திடீரென்று வைக்கப்பட்ட அஞ்சலையம்மாள் யார் என பலரும் தமிழக வரலாற்றை தேட ஆரம்பித்தனர். அந்த வகையில் அஞ்சலையம்மாள் யார் என்பதை இங்கு பார்ப்போம்.
Anjalai Ammal History: அஞ்சலையம்மாள் வரலாறு
கடந்த 1890 ஆம் ஆண்டு ஜீன் 1 ஆம் தேதி கடலூரில் அம்மாக்கண்ணு மற்றும் முத்துமணி தம்பதிகளுக்கு மகளாக பிறந்தவர் தான் அஞ்சலை. அவர் தன்னுடைய ஆரம்ப கல்வியை ஒரு திண்ணைப் பள்ளிக்கூடத்தில் ஆரம்பித்தார். ஆனால் அன்றைய காலச்சூழலில் அவரால் 5 வகுப்புக்கு மேல் படிப்பை தொடர முடியவில்லை. இந்நிலையில் அவர் அதே ஊரை சேர்ந்தவரான முருகப்பாவை திருமணம் செய்து கொண்டார். முருகப்பா நெசவுத்தொழில் செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமணத்திற்கு பிறகு தனது கணவர் முருகப்பா நெய்து தரும் துணிகளை அஞ்சலை வெளியில் பல்வேறு இடங்களுக்கு எடுத்து சென்று விற்று வந்தார். அவ்வாறு இவர் பல்வேறு இடங்களுக்கு சென்று வருவதால் நாட்டு நடப்புகளை எளிதாக அறிந்து கொண்டார்.அந்த வகையில் நாடும் நாட்டு மக்களும் அப்போது வெள்ளையர்களிடம் அடிமைப்பட்டு கிடப்பதை வெறுத்தார். மேலும் நெசவுத்தொழிலில் பெரியாருடன் ஈடுபடும் சூழலில் அவருடைய கொள்கைகளில் ஈர்க்கப்பட்டார்.மேலும் பெண்கள் வீட்டில் முடங்கி கிடப்பவர்கள் அல்ல ஆணுக்கு நிகராக போராடக்கூடியவர்களே என்பதை நிரூபிக்கும் வகையில் அவரே களத்தில் இறங்கினார்.
அப்போது மகாத்மா காந்தியால் ஆரம்பிக்கப்பட்ட ஒத்துழையாமை இயக்கத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். இது தொடர்பாக நடைபெற்ற பல்வேறு போராட்டங்களில் இவரும் கலந்து கொண்டார். அதுமட்டுமல்லாமல் காந்தியின் போராட்டங்களை தென்னிந்தியாவில் கையிலெடுத்த முதல் பெண்மணியும் இவரே என்ற பெருமைக்குரியவர்.
அப்போது போராட்டத்திற்க்கு தேவைப்படும் நிதிக்காக தனது நிலம் மற்றும் வீடுகளை விற்று செலவு செய்தார். இதையெல்லாம் அறிந்த மகாகவி பாரதியார் புதுச்சேரியிலிருந்து கடலூர் வந்து அஞ்சலையம்மாளை சந்தித்து பாராட்டியும் சென்றுள்ளார். அப்போது பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரவே அஞ்சும் இக்காலத்தில் அஞ்சலையம்மாள் பொது வாழ்க்கைக்கு வந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் அவர் பாராட்டியுள்ளார்.
இந்திய சுதந்திர போராட்டத்தில் 1857 ஆம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய் கழகம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த போராட்டத்தின் போது அதில் ஈடுபட்ட பல சிப்பாய்களையும், பொதுமக்களையும் கொல்ல காரணமாயிருந்தவர் ‘ஜேம்ஸ் நீல்’ என்ற ஆங்கிலேயே படைத்தளபதியாவார். அவரின் நினைவாக ஆங்கிலேய அரசு 1860 இல் அவருக்கு சிலையை நிறுவியது. அப்போது இந்த சிலையை அகற்ற கோரி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் தனது மகள் அம்மாக்கண்ணுவுடன் கலந்து கொண்டார். ஆவேசத்தில் இருந்த அவர் அந்த சிலையை உடைத்தெறிந்தார். அதற்காக அவர் தனது மக்களுடன் கைதாகி ஓராண்டு சிறை தண்டனையையும் அனுபவித்தார்.
சிறைத்தண்டனை முடிந்து வெளியே வரும் நிலையிலிருந்த இவர்களை மகாத்மா காந்தி சந்தித்தார். அப்போது அஞ்சலையம்மாளுடன் இருந்த அவரது மக்கள் அம்மாக்கண்ணுவை தனது வார்தா ஆஸ்ரமத்திற்கு காந்தி அழைத்துச் சென்றார். அங்கு அவருக்கு லீலாவதி என்று பெயரிட்டு வளர்த்தனர். காந்தியின் மீது பெரும் மதிப்பு கொண்ட அஞ்சலையம்மாள் ஆங்கிலேயர்களை எதிர்த்து அவர் நடத்திய அனைத்து போராட்டங்களிலும் முழுமூச்சுடன் கலந்து கொண்டார்.
மகாத்மா காந்தி நடத்திய போராட்டங்களில் முக்கியமானது உப்பு சத்தியாகிரகப் போராட்டமாகும். அந்த வகையில் 1931 ஆம் ஆண்டு தமிழகத்தில் கடலூரில் நடைபெற்ற உப்பு சத்தியாக்கிரப் போராட்டத்தில் அஞ்சலையம்மாள் கலந்து கொண்டார். அப்போது போலீசாரால் தாக்கப்பட்ட அவர் படுகாயமடைந்தார். இவ்வாறு காயமடைந்த நிலையிலும் அதற்கான சிகிச்சைக்காக செல்லாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கைது செய்யப்பட்டு 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து வேலூர் சிறைக்கு அனுப்பப்பட்ட அவர் 6 மாதம் கர்ப்பமாக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் குழந்தை பிறக்கும் தருணத்தில் விடுப்பில் வெளியே வந்த அவர் பிரசவத்திற்கு பிறகு 15 நாட்களில் குழந்தையுடன் சிறைக்கு சென்று மீதமுள்ள சிறைத்தண்டனையை நிறைவு செய்த பின்னர் வெளியே வந்தார். இவர் ஜெயிலில் இருந்த போது பிறந்ததன் காரணமாக அப்போது பிறந்த குழந்தைக்கு ஜெயில் வீரன் என்று பெயரிட்டார். பின்னாளில் அவர் ஜெயவீரன் என்று அழைக்கப்பட்டார்.
பின்னர் அதே ஆண்டில் சென்னையில் அனைத்திந்திய மாதர் சங்க காங்கிரஸ் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அஞ்சலையம்மாள் தலைமை தாங்கினார். அடுத்த ஆண்டு காந்தியின் மது ஒழிப்புக் கொள்கைக்கு ஆதரவாக கள்ளுக்கடை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு பொதுமக்களை திரட்டி மறியல் போராட்டம் நடத்தினார். இதற்காக அவருக்கு ஒன்பது மாத கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டார்.இந்த தண்டனை முடிந்து விடுதலையாகி வெளியே வந்ததும் அந்நியத்துணி எதிர்ப்பு மற்றும் எரிப்பு பேராட்டத்தில் அவர் கலந்து கொண்டு மீண்டும் கைதாகி சிறைக்கு சென்றார்.
மகாத்மா காந்தியின் போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டு வந்த அஞ்சலையம்மாளை காந்தி சந்திக்க விரும்பினார். அந்த வகையில் 1934 ஆம் ஆண்டில் கடலுார் வந்த அவர், அஞ்சலையம்மாளை சந்திக்க முயற்சி செய்தார். ஆனால் பிரிட்டிஷ் அரசு அவரை சந்திக்க தடைவிதித்தது. இதை அறிந்த அஞ்சலையம்மாள் எப்படியாவது காந்தியை சந்திக்க வேண்டும் என்று முடிவு செய்தார். அதனால் மாறுவேடம் அணிந்து யாருக்கும் தெரியாமல் வந்து காந்தியை சந்தித்தார். அப்போது இவரது இந்த துணிச்சலைப் பாராட்டிய காந்தி இவரை ‘தென்னாட்டு ஜான்சி ராணி‘ என்று அழைத்து பெருமைப்படுத்தினார்.
பின்னர் 1940 ஆம் ஆண்டில் நடைபெற்ற சத்தியாக்கிரக போராட்டத்தில் இவர் பங்கேற்றார். இதற்காக அவருக்கு 6 மாதம் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதனையாடுறது அவர் கண்ணனூர் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் வெள்ளையனே வெளியேறு போராட்டம் நடைபெற்ற போது அதில் பங்கேற்று பல்வேறு நகரங்களுக்கும் சென்று ஆவேசமாகப் பேசினார். அப்போது அரசுக்கு எதிரான பிரசங்கம் என்று கூறி கைது செய்யப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இவரைப் போன்ற பலரின் வீர போராட்டங்களால் தான் 1947 ஆம் ஆண்டில் நம்நாடு ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெற்றது. அந்தவகையில் வீரமிக்க போராடிய இவர் போன்றவர்களை கவுரவிக்க வேண்டும் என்று கருதிய அரசு இவருக்கு தியாகி பட்டம் வழங்கி, ஒய்வூதியத்தையும் அறிவித்தது. ஆனால் இந்த இரண்டிற்காகவும் நான் பேராடவில்லை என்று கூறிய அஞ்சலையம்மாள் தியாகி பட்டத்தை ஏற்கவும், ஒய்வூதியத்தை பெறவும் மறுத்து விட்டார்.
பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் கடலுார் தொகுதியிலிருந்து மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். தேர்வு செய்யப்பட்ட அவர் சட்டமன்றத்தில் நெசவாளிகளுக்காவும்,விவசாயிகளுக்காகவும் உரத்த குரல் கொடுத்தார்.அப்போது கடலூர் தொகுதியில் நீண்ட காலமாக நிலவி வந்த தண்ணீர் பிரச்னையை கிளை வாய்க்காலை உருவாக்கி தீர்த்து வைத்தார் இதன் காரணமாக இன்றும் அவர் உருவாக்கிய அந்த வாய்க்கால் ‘அஞ்சலை வாய்க்கால்’ என்றே அவரின் பெயருடன் அழைக்கப்டுகிறது.
இந்நிலையில் கட்சிப் பணிக்காகவும், விடுதலைப் போராட்டத்திற்காகவும் தான் குடியிருந்த வீட்டை அடகு வைத்து செலவு செய்ததால்,கடனை அடைக்க முடியாமல் அந்த வீடு ஏலத்திற்கு வந்தது. அப்போது இதையறிந்த அவர் ஆதரவாளர்கள் சிலர் இணைந்து அந்த வீட்டை மீட்டனர், மீட்ட வீட்டை அஞ்சலையம்மாள் பெயரில் எழுதி வைத்தால் மீண்டும் அடகு வைத்துச் செலவு செய்து விடுவார் என்று கருதிய அவர்கள் மூத்த மகன் காந்தி மற்றும் இளைய மகன் ஜெயவீரன் பெயரில் எழுதி வைத்தனர்.
இறுதியாக தனது மூத்த மகன் காந்தியுடன் சிதம்பரம் அடுத்துள்ள சி. முட்லூர் என்ற சிற்றூரில் குடியேறி வேளாண்மைப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். அங்கு 1961 ஆம் ஆண்டு பிப்ரவரி 20 அன்று தன் 71 ஆம் வயதில் அஞ்சலையம்மாள் காலமானார். அவர் காலமான கையோடு அவரது சுதந்திர போராட்ட மற்றும் அரசியல் வரலாறும் கூட கிட்டத்தட்ட புதைக்கப்பட்டுவிட்டது.
இப்போது தமிழக வெற்றிக் கழகம் “வீரப்பெண்மணி”, “தென்னாட்டு ஜான்சிராணி” அஞ்சலையம்மாள் வரலாறை துாசுதட்டி எடுத்து எடுத்துள்ளது.
ஒரு முறை தேர்தலில் வெற்றி பெற்றவர்களே தங்களுடைய புகழை பரப்பும் வகையில் அரசு திட்டங்களுக்கு தங்களுடைய பெயர் வைப்பது, ஊர் முழுக்க சிலை வைப்பது என அவர்களின் வரலாற்றை பரப்ப முயற்சி செய்கின்றனர்.
அந்த வகையில் நாட்டிற்காக பேராடிய, சுதந்திர போராட்டத்திற்காக தனது சொத்துக்களை விற்ற, சிறை செல்வதற்கு அஞ்சாத, சிங்கப்பெண்ணாக வாழ்ந்து மறைந்திட்ட அஞ்சலையம்மாள் போன்ற வரலாற்றில் மறைக்கப்பட்டவர்களை பற்றி இனியாவது இந்த நாடும், மக்களும் அறிந்து கொள்ளட்டும்.