திருப்பதிக்கு செல்லும் பக்தர்கள் முதலில் புஷ்கரணியில் நீராடி வராக சுவாமியை தரிசனம் செய்ய வேண்டும் என்பது ஸ்ரீனிவாசனின் முடிவு என்று புராண கதைகள் குறிப்பிடுகின்றன.
ஆனால், இன்று 99 சதவீதம் பேர் நேரடியாக வெங்கடாசலபதியை தரிசித்து வருகின்றனர். இவ்வாறு செய்வதன் மூலம் எந்த வித பலனும் கிடைக்காது என்றும் கூறப்படுகிறது.
ஸ்ரீனிவாசரின் தல புராணக் கதை :-
சேஷாத்திரி, கருடாத்திரி, நீலாத்திரி, அஞ்சனாத்திரி, விருஷபாத்திரி, நாராயணாத்திரி, வெங்கடாத்ரி என ஏழு மலைகள் சூழந்த இடத்தில் இருப்பதால் இத்தலம் ஏழுமலை என்றும், இத்தலத்தின் மூலவர் ஏழுமலையான் என்றும் அழைக்கப்படுகிறார். இத்தலத்தின் மூலவர் வெங்கடாசலபதி என்றும் வேங்கடன் என்றும் அழைக்கப்படுகிறார்.
பிருகு போன்ற முனிவர்கள் யாகம் செய்தார்கள். அந்த யாகத்தின் பலனை சாந்தமான மூர்த்தியொருவருக்கே அளிக்க வேண்டுமென எண்ணி, மும்மூர்த்திகளில் திருமாலின் இருப்பிடத்திற்கு சென்றார். பிருகு முனிவரின் வருகையை அறியாது உறங்கிக் கொண்டிருந்த திருமாலின் மார்பில் எட்டி உதைத்தார். அதனால் திருமாலின் இதயத்தில் இருந்த திருமகள் கோபம் கொண்டு அவரிடமிருந்து சென்றார்.
திருமால் பூமியில் திருமகளைத் தேடி வேங்கட மலையில் ஓரிடத்தில் தவமிருந்தார். அவரைச் சுற்றி புற்று உருவானது. அப்புற்றில் தவமிருந்த திருமாலின் மீது புற்றினை உடைக்க வீசப்பட்ட கோடாறியால் திருமாலின் தலையிலிருந்து ரத்தம் வெளிப்பட்டது. திருமால் தவம் களைந்து வகுளாதேவி ஆசிரமம் சென்றார். சீனிவாசன் என பெயரிட்டு அங்கு வகுளாதேவி அன்புடன் உபசரித்தார்.
அவர்களின் ஆசிரமம் அருகே இருக்கும் சந்திரிகிரி நாட்டினை ஆகாசராஜன் என்பவர் ஆண்டு வந்தார். அவருடைய மகளான பத்மாவதிக்கு சீனிவாசனை மணம் செய்விக்க வகுளாதேவி சென்றார். இருவருடைய திருமணமும் மிகச் சிறப்பாக நடந்தேற சீனிவாசன், குபேரனிடம் கடன் வாங்கினார் என்பது தலபுராணம் கூறு கதையாகும்.
புஷ்கரிணியில் ஸ்நானம் செய்யாவிட்டாலும், முகம், கால், கைகளை கழுவிவிட்டு, வராக பகவானை தரிசனம் செய்துவிட்டு ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியை தரிசனம் செய்ய சென்றால், நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்கின்றனர் ஆச்சாரியர்கள்.