Madras High Court: பொது வெளிகளை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்படும் கட்டிடங்களுக்கு கட்டாயம் மின் இணைப்பு தரக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பல மக்கள் நீர்நிலைகள் என தொடங்கி நெடுஞ்சாலை வரை பலவற்றையும் ஆக்கிரமிப்பு செய்து தங்களுக்கு தேவையான கட்டிடங்களை கட்டிக் கொள்கின்றனர். இவ்வாறு கட்டுவதால் அந்த இடத்திற்கு அருகில் உள்ள உரிமை உடைய பட்டாத்தாரருக்கே அதிகாரமில்லாமல் போய் விடுகிறது.
இவ்வாறான ஒரு வழக்கு குறித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த நபர் மனு அளித்திருந்தார். அதில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குஜிலியம்பாறை என்ற தாலுகாவில் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. இதன் நடுவே எனது சொந்த நிலத்திற்கு கூட இதனால் செல்ல முடியவில்லை.
பொதுவாகவே நீர்நிலைகள், நெடுஞ்சாலைகள் என பொதுவெளிகளை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டக்கூடாது என்ற சட்டம் உள்ள நிலையில் இவ்வாறு கட்டிடங்கள் கட்டப்பட்டிருப்பது குற்றத்திற்குரியது என்றும் கூறியுள்ளார். இதனை விசாரணை செய்த நீதிபதிகள் எப்படி நெடுஞ்சாலையில் கட்டிடம் கட்டி அதற்கு தண்ணீர் மற்றும் மின்சார விநியோகம் தமிழக அரசால் செய்ய முடிந்தது என கேள்வி எழுப்பினர்.
மேற்கொண்டு அந்த இடத்தில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை உடனடியாகஇடிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளனர். அதேபோல இனி வரும் நாட்களில் இது போல் பொது வெளிகளை ஆக்கிரமிப்பு செய்து கட்டிடம் கட்டுபவர்களுக்கு கட்டாயம் மின் மற்றும் குடிநீர் இணைப்பு வழங்கக் கூடாது என தெரிவித்துள்ளனர்.