நம் தமிழகத்தில் மிகவும் புகழ்பெற்ற திருத்தளங்களில் ஒன்று அண்ணாமலையார் கோயில்.இது தமிழகத்தின் வட மாவட்டமான திருவண்ணாமலையில் அமைந்திருக்கிறது.இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் தீபத் திருவிழா நடைபெறுவது வழக்கம்.இந்த தீப திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
இந்நிலையில் இந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழா வருகின்ற டிசம்பர் 01 முதல் 17 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது என்று அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருக்கிறார்.
மேலும் டிசம்பர் 04 அன்று அண்ணாமலையார் கோயிலில் கொடியேற்றம் நடைபெற உள்ளது.அடுத்ததாக டிசம்பர் 10 அன்று மகாதேரோட்டம் சிறப்பாக நடைபெற இருக்கிறது.டிசம்பர் 13 அன்று அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா நடைபெறுகிறது.அதிகாலை நேரத்தில் பரணி தீபமும்,மாலை 6 மணிக்கு மகா தீபமும் ஏற்றப்படுகிறது.’
பரணி தீபத்திற்கு கோயிலுக்குள் 7500 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.இந்த பரணி தீப தரிசனத்திற்கு ஆன்லைனில் 500 பேருக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது.அதேபோல் மகா தீபத்திற்கு கோயிலுக்குள் 11,500 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.இந்த மகா தீப தரிசனத்திற்கு ஆன்லைனில் 1100 பேருக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது.இது தவிர மகா தீபத்தின் போது இரண்டாயிரம் பக்தர்களுக்கு தரிசிக்க அனுமதி வழங்கப்பட இருக்கிறது.இந்த அனுமதியானது உடல் பரிசோதனை அடிப்படையில் வழங்கப்படுகிறது.
மேலும் பரணி தீபத்திற்கு உபயதாரர்கள் மற்றும் கட்டளைதாரர்கள் 5200 பேர் மற்றும் மகா தீபத்திற்கு 8000 பேர் அனுமதிக்கப்பட உள்ளனர்.பக்தர்களின் நலனிற்காக கோயிலில் 3 மருத்துவ முகாம்கள் மற்றும் 85 மருத்துவ குழுக்கள் பணியமர்த்தபட இருக்கின்றனர்.
அண்ணாமைலையாரை தரிசிக்க பக்தர்களுக்கு உரிய போக்குவரத்து வசதி செய்துதரப்படும்.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மகா தேரோட்டத்தின் போது மாட வீதியில் மின்சாரம் துண்டிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருக்கிறார்.