சீதாராமம் படம் பார்த்து, அன்று இரவு முழுவதும் சரியான தூக்கம் இல்லை, காலையில் கூட சீக்கிரமா கண் முழிபட்டு ‘ராம்’ னு சீதா கூப்பிடுகிற காட்சிதான் மனசுக்குள் அடிக்கடி வந்தவாரே இருந்தது, ராம், சீதா இருவரின் கதாபாத்திரங்கள் மனசுக்கு நெருக்கமானதால, அது ஒரு சாதாரண சினிமானு புரிஞ்சிக்கிர அளவுக்கு பக்குவம் இருந்தும் கூட இறுதியில ராமோட மரணத்தை மனசால ஏத்துக்க முடியல, இப்படி ஒரு சில கைவிட்டு எண்ணக்கூடிய திரைப்படங்கள் மாத்திரம்தான் எவ்வளவு காலம் ஆனாலும் மனசுக்கு நெருக்கமா இருக்கும், சின்னவயசுல நெஞ்சிருக்கும் வரை திரைப்படத்தோட க்ளைமேக்ஸ் காட்சியை பார்த்து நிறைய தடவை அழுதிருக்கேன்.
விஸ்வாசம், டான், மாதிரியான திரைப்படங்கள் எல்லாம் ஆரம்பத்தில இருந்து இறுதி காட்சிக்கு முதல் வரை படு சுமாராக இருக்கும், ஆனால் க்ளைமேக்ஸ் காட்சியில ரசிகர்களோட எமோசனல் வீக்னஸ குறிவைச்சு தாக்கி சூப்பர்ஹிட் அடிச்சிருக்கும். நேற்று காலையில் இருந்து அமரன் படம் பற்றிய விமர்சனங்கள் யாவும் க்ளைமேக்ஸ் காட்சியில் கண்களில் இருந்து நீரை வர வைக்கிறது என்றே பலபேரால் இணையத்தில் பதிவிடப்பட்டு வந்தது. அப்படியான பதிவுகளை பார்க்கும் போது விஸ்வாசம், டான் படங்கள் தான் நினைவுக்கு வந்தது, காரணம் அமரன் திரைப்படத்தின் போஸ்டர்கள், முன்னோட்டம் எல்லாம் வந்த போது ஒரு துளி கூட படம் நன்றாக வரும் என்ற நம்பிக்கை இல்லை, இறுதியில் சாய்பல்லவி கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தி படக்குழு வெளியிட்ட ஒரு முன்னோட்டம்தான் படம் மீது சிறிய நம்பிக்கையை தந்தது.
இப்படியான மனநிலையில் தியேட்டர் சென்ற எனக்கு சிவா, சாய்பல்லவி, ஜீவி, ராஜ்குமார் பெரியசாமி ஆகியோர் அமரனில் தந்த வியப்புக்கள் எண்ணில் அடங்காதவை என்னவொரு அழகான காதல் காட்சிகள், அந்த காதல் உணர்வுகளை ஒரு படி மேலே தூக்கி பிடிப்பது போல் மனதை வருடும் இதமான இசை, சலிப்பு தட்டாத உண்மைக்கு நெருக்கமான இராணுவ காட்சிகள், சாய்பல்லவியின் அழகு, அதனை மிஞ்சும் அளவுக்கு நடிப்பு, முகுந்த் கதாபாத்திரத்துக்காக சிவா போட்ட எபெக்ட், இராணுவ வீரர்கள், குடும்ப உறுப்பினர்களுக்காக தெரிவு செய்யப்பட்ட நடிகர்கள், வேகமாக நகரும் ஸ்கிரீன் ப்லே என்று எல்லா பக்கத்திலும் இருந்து சிக்ஸர்களை விளாசி தள்ளியிருக்கிறது படக்குழு, தமிழ்சினிமாவில் பேசப்படும் இயக்குனர்களில் ராஜ் குமார் பெரியசாமியும் இனி இணைவார் என்பதில் சந்தேகம் இல்லை, படம் சூப்பர் ஹிட்!!