தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்துவரும் 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதில் தர்மபுரி, சேலம், நாமக்கல், நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, வட தமிழகம் காரைக்கால் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
அதே போல் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் மட்டும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் வெப்பநிலையானது அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸும் குறைந்தபட்சமாக 29 டிகிரி என்ற அளவிலும் காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை எச்சரிக்கை:
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் குமரிக் கடல் பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எனவும், மேலும் வட தமிழக கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.