கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தூய்மை பணியாளர்களுக்கு 288 அடுக்குமாடி குடியிருப்புகள் மானிய விலையில் வழங்கப்பட தயாராக உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருக்கிறார்.
மானிய விலையில் வழங்கப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு, மத்திய அரசின் பங்களிப்பாக 1.50 லட்சமும் மாநில அரசின் பங்களிப்பாக 7 லட்சமும் மானியமாக வழங்கப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மீதமுள்ள 2.11 லட்சத்தை மட்டும் பயனாளிகள் பங்களிப்பாக செலுத்தினால் போதும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருக்கிறார்.
சொந்த வீடு இல்லாமல் தவிக்க கூடிய ஏழை எளிய மக்களுக்காக மத்திய மற்றும் மாநில அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. மக்கள் பெரிதும் பயன்படும் வகையில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், கலைஞர் கனவு இல்லம் திட்டம் ஆகியவை தற்பொழுது தமிழ்நாட்டில் இயங்கி வருகிறது. இதன் அடிப்படையில் தான் கன்னியாகுமரி மாவட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கான 288 அடுக்குமாடி குடியிருப்புகள் வழங்கப்பட இருக்கின்றன.
இதுகுறித்து அம்மாவட்ட ஆட்சியர் கூறுவதாவாது :-
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் பணிபுரியும் சொந்த வீடற்ற தூய்மை பணியாளர்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் ஆரல்வாய்மொழி பேரூராட்சிக்கு உட்பட்ட குமாரபுரத்தில் 288 அடுக்குமாடி குடியிருப்புகள் திட்டப்பகுதியில் குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.
கன்னியாகுமரி-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையின் அருகாமையில் உள்ள இந்த குடியிருப்புகள் ஒவ்வொன்றும் 400 சதுரஅடி பரப்பளவில் ஒரு வரவேற்பு அறை, ஒரு படுக்கையறை, சமையலறை, குளியலறை, கழிப்பறை மற்றும் குடிநீர் இணைப்பு, மின் இணைப்பு போன்ற வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
ஒரு குடியிருப்புக்கான மதிப்பீட்டு தொகை ரூ.10.61 லட்சம் ஆகும். இதில் மத்திய அரசின் பங்களிப்பாக ரூ.1.50 லட்சமும், மாநில அரசின் பங்களிப்பாக ரூ.7 லட்சமும் மானியமாக வழங்கப்படுகிறது. மீதமுள்ள ரூ2.11 லட்சம் பயனாளிகளிடமிருந்து பயனாளி பங்களிப்பு தொகையாக பெறப்படும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
மேலும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற, தூய்மை பணியாளர்கள் நலவாரிய அட்டை நகல் பெற்றுள்ள 50 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுள்ள குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் தூய்மை பணி செய்பவர்கள் விண்ணப்பிக்கலாம். பணியாளர்கள் பெயரிலோ அல்லது குடும்ப உறுப்பினர்களின் பெயரிலோ சொந்தமாக வீடோ, நிலமோ இருத்தல் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு குறைவாக இருத்தல் வேண்டும். இந்த தகுதியுள்ள பயனாளிகள் தூய்மை பணியாளர் நலவாரிய அட்டை நகல், குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினர்களது ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல், 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம், வருமானச் சான்று, பணிபுரியும் சான்று மற்றும் வாக்காளர் அடையாள அட்டை நகல் பொன்ற ஆவணங்களுடன் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் வந்து பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
குறிப்பாக இதற்கான காலக்கெடு 3 நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அது நவம்பர் 14 முதல் 16 வரை ஆகும்.