கோவை மாநகராட்சியில் வசிக்கும் மக்களுக்கு எளிமையான முறையில் தங்களுடைய வரிகளை செலுத்த அரசு சிறப்பு முகாம்களை ஏற்படுத்தி உள்ளது. இன்று மற்றும் நாளை இரண்டு நாட்கள் இந்த சிறப்புகள் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முகாம்கள் மூலம் மக்கள் எளிய முறையில் சொத்து வரி, காலியிட வரி, தொழில் வரி உள்ளிட்ட வரிகளை செலுத்த முடியும் என்றும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வைத்துள்ளதால் வேலைக்கு செல்லும் மக்களாலும் எளிமையான முறையில் வரிகளை செலுத்த முடியும் என்று மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
கோவை மாநகராட்சி சார்பில் சொத்து வரி, காலியிட வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் மற்றும் வரியில்லா இனங்கள் அவ்வப்போது சிறப்பு முகாம் அமைத்து வசூலிக்கப்படுகின்றன. இதில், சொத்து வரி ஆறு மாதத்துக்கு ஒருமுறையும், குடிநீர் கட்டணம் இரு மாதத்துக்கு ஒருமுறையும் வசூலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
கோயம்புத்தூர் மாநகராட்சியில் நடப்பு 2024-25 ஆம் நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டு வரையிலான வரிகளை மக்கள் எளிமையான முறையில் செலுத்தும் வகையில் கோயம்புத்தூர் மாநகராட்சி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. கோயம்புத்தூர் மாநகராட்சியின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த சிறப்பு வரி வசூல் முகாம்கள் நவம்பர் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே இயங்கும் என்றும் மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, கோவையை சேர்ந்த மக்கள் இதனை பயன்படுத்தி பயன்பெறுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.