இந்தியாவில் காற்று மாசுபாடு அதிகமாக உள்ள மாநிலங்களில் புது டெல்லி முதலிடத்தைப் பெற்றுள்ளது. டெல்லியைத் தொடர்ந்து பல வட மாநிலங்களில் காற்று மாசு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்படைந்துள்ளது. அந்த வரிசையில் பாகிஸ்தான் நாட்டில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் காற்று மாசுபாடு சற்று அதிகரித்துள்ளது.
பஞ்சாப் மாகாணத்தில் இதுவரை இல்லாத வகையில் காற்று தரக் குறியீடு 1600 ஆக அதிகரித்துள்ளது. மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு நவம்பர் 17ஆம் தேதி வரை பள்ளி மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், புகை மண்டலம் கண்ணை மறைக்கும் அளவிற்கு மிகவும் மோசமான இருக்கிறது என்றும், புகைமூட்டம் அதிகமாக இருப்பதால் வாகன ஓட்டிகளுக்குப் பயணம் செய்வதில் சற்று சிரமமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், அனைத்து கல்வி நிலையங்களுக்கும் நவம்பர் 24ஆம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அரசு, தனியார் பள்ளிகள் மற்றும் தனியார் கல்வி பயிற்சி மையங்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களையும் ஆன்லைன் வழியே பயிற்சிகளை நடத்த கூறப்பட்டிருந்தது. முர்ரீ மாவட்டத்தில் மட்டும் இந்த ஆணைக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
காற்று மாசுபாடு அதிகரித்திருக்கின்ற நிலையால் லாகூர் மற்றும் முல்தான் ஆகிய நகரங்களில் வாரத்திற்கு 3 நாட்கள் முழு ஊரடங்கு பஞ்சாப் மாகாண அரசு அமல்படுத்தி இருந்தது. அதன்படி, இன்றும் நாளையும் முழு ஊரடங்கு தொடர்வதாக கூறப்பட்டுள்ளது. அது மட்டும் இல்லாமல், நவம்பர் 18ஆம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு காற்று மாசுபாடு கண்காணிக்கப்படும் என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாட்டின் விளைவாக பல புதிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. டெல்லி அரசு அலுவலகங்கள் காலை 10 மணி முதல் மாலை 6:30 மணி வரையிலும், மத்திய அரசு அலுவலகங்கள் காலை 9 மணி முதல் மாலை 5:30 மணி வரையிலும், மாநகராட்சி அலுவலகங்கள் காலை 8:30 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் இயங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகனங்களில் வரும் புகையைக் கட்டுப்படுத்துவதற்காகவே இந்த அறிவிப்புகள் வெளியாகி உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
காற்று தரக் குறியீடு மேலும் அதிகரித்தால் நடவடிக்கைகள் தீவிரமாக்கப்படும். கட்டுமானப் பணிகள் மற்றும் இடிப்பு பணிகள் நிறுத்தப்படும் என்றும், 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
நம் அன்றாட வாழ்வில் பயணம் செய்வதற்கு மிகவும் முக்கியமான பங்காக வாகனங்கள் இருக்கின்றன. அதே சமயம், வாகனங்களால்தான் முக்கியமாக காற்று மாசு ஏற்படுகிறது என்பதை எண்ணும்போது சற்று கவலையூட்டும் விதமாகவே உள்ளது. இது அனைத்து மக்களையும் பாதிக்கக் கூடிய வகையில் இருக்கிறது. என்னதான் அரசு சார்பில் ஆணைகள் பிறப்பித்தாலும், மக்களாகிய நாமும் இதனைக் கருத்தில் கொண்டு ஆணைகளைக் பின்பற்றி காற்று மாசைக் கட்டுப்படுத்துவோம்.