தமிழ்த் திரையுலகில் எழுத்தாளர், பாடலாசிரியர், நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் போன்ற பன்முகத் தன்மைகளைக் கொண்டவர் “கவியரசர் கண்ணதாசன்” அவர்கள். தொடக்கத்தில் திரைக்கதை மட்டும் எழுதிய அவர், பின்பு பாடல்கள் உட்பட பல வேலைகளில் ஈடுபட்டு இருக்கிறார். அவர் எழுதிய ஒவ்வொரு பாடலும் தத்துவமாகவும், மனதிற்கு மகிழ்ச்சியூட்டும் வகையிலும் இருக்கும். இன்றளவும் அவரது படைப்புகள் பேசப்பட்டு வருகின்றன. தமிழில் வெளியான ஹிட் படங்களுக்கு இவர் ஒரு காரணமாக இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
திரைத் துறையில் வருவதற்கு முன்பு அரசியல் மீது ஆர்வம் காட்டியுள்ளார் கண்ணதாசன். காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய இயக்கங்களில் மிகவும் ஆர்வமாக இருந்திருக்கிறார். பின்பு அவர் திராவிட இயக்கத்தில் இணைந்துள்ளார்.
1962 ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் தமிழ் தேசிய கட்சியின் சார்பாக இவிகே சம்பத்துடன் இணைந்து திருகோஷ்டியூர் தொகுதியில் போட்டியிட்டு இருக்கிறார். திரைத்துறையில் பிரபலமாக இருந்தாலும், இந்த தேர்தலில் அவர் தோல்வியை சந்தித்துள்ளார். என்னதான் அறிவும் திறமையும் தமக்கு இருந்தாலும், இந்தத் தேர்தலில் வெற்றி பெறவில்லையே என்ற விரக்தியோடு சென்னைக்கு வந்துள்ளார் கண்ணதாசன். அப்போது அவருக்கு ஏவிஎம் தயாரித்த “அன்னை” என்ற படத்தில் பாடல் எழுத வாய்ப்பு கிடைத்துள்ளது.
வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட கண்ணதாசன், அந்தப் படத்தில் ஒரு தத்துவ பாடலை எழுதியுள்ளார். படத்தில் அந்தப் பாட்டை பாடிய நடிகர் சந்திரபாபு இன்றளவும் அந்தப் பாடலால் பேசப்படுகிறார். அந்தப் பாடல்தான் “புத்தி உள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை, வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை” என்ற பாடல். கண்ணதாசனின் விரக்தியால் எழுதப்பட்ட பாடல் நடிகர் சந்திரபாபுவுக்கு புகழின் உச்சியைக் கொடுத்துவிட்டது.