மக்கள் நேரத்தைத் துல்லியமாகக் கணக்கிடுவதற்குத் தான் “கடிகாரம்” கண்டுபிடிக்கப்பட்டது. கடிகாரம் கண்டுபிடிப்பதற்கு முன்பு சூரிய ஒளியின் நிழலை வைத்துதான் நேரத்தைக் கணக்கிடுவார்கள். இப்போதுகூட சில கிராமங்களில் உள்ள மக்கள் சூரியனின் நிழலை வைத்து சரியாக நேரத்தை கூறுவார்கள். ஆரம்ப காலகட்டத்தில் மணியை மட்டும் காட்டும் கடிகாரங்கள்தான் பயன்படுத்தி இருக்கிறார்கள். 15-ஆம் நூற்றாண்டில் ஜெர்மனியில்தான் முதன்முறையாக நிமிடம் மற்றும் வினாடி உடைய கடிகாரத்தை கண்டுபிடித்தனர்.
பொதுவாக, கடைகளில் புதிதாக வைத்திருக்கும் கடிகாரங்களில் 10 மணி, 10 நிமிடம் தான் குறிப்பிடப்பட்டிருக்கும். இதை வைத்திருப்பதற்கு சில காரணங்கள் உள்ளன என்று பல கட்டு கதைகள் எழுந்து வந்தன. அதைப் பற்றி இங்கு விரிவாகப் பார்ப்போம்.
சர்வதேச கடிகார தினம் அக்டோபர், 10 அன்று அனுசரிக்கப்படுகின்றது. தேதியும் 10, மாதத்தின் எண்ணிக்கையும் 10 என்பதால்தான் 10 மணி, 10 நிமிடம் என்ற குறியீட்டைக் கடிகாரத்தில் வைத்துள்ளதாக சில பேர் கூறுவர்.
விஞ்ஞானி “கிறிஸ்டியான் கியூஜன்ஸ்” அவர்கள் பெண்டுலத்தோடு கூடிய கடிகாரத்தைக் கண்டுபிடித்த நேரம் இதுதான், இதனால்தான் இந்த நேரத்தை வைத்துள்ளார்கள் என்று சில பேர் கூறுவர். ஒரு சிலர், கடிகாரத்தை முதலில் கண்டுபிடித்தவர் 10:10 மணிக்கு இறந்ததால்தான் இந்த நேரம் குறிப்பிடப்பட்டு இருக்கின்றது என்று கூறுவர்.
பல கட்டுக் கதைகள் மக்களிடையே இருந்தாலும், அதன் உண்மையான காரணம் குறித்துப் பார்ப்போம். பொதுவாக, கடிகாரங்களில் அதன் தயாரிப்பு நிறுவனங்களின் லோகோ 12 என்ற எண்ணிற்குக் கீழ் அச்சிடப்பட்டிருக்கும். அது தெரிய வேண்டும் என்பதற்காகத்தான் 10 மணி 10 நிமிடம் காட்டப்படுவதாக கூறப்படுகிறது. ஒரு சில நிறுவனங்கள் மக்களைக் கவரும் வகையில் மாறுபட்ட நேரங்களையும் காட்டுவர்.
என்னதான் பல வகையான கடிகாரங்கள் வந்தாலும், அதில் காட்டக்கூடிய நேரத்தை நாம் சில சமயங்களில் மறந்து விடுகின்றோம். எனவே, கடிகாரம் காட்டக்கூடிய நேரத்தை சரியாகப் பயன்படுத்தி நம்முடைய வேலைகளைச் செய்தால் வாழ்வில் சிறப்பாகலாம் என்பதே மக்களின் கருத்தாக உள்ளது.