தமிழ்த் திரையுலகில் இயக்குனர் வெற்றிமாறன் பல வெற்றிப் படங்களைத் தந்து வருகிறார். அந்த வரிசையில் வரும் “விடுதலை-2” திரைப்படம் டிசம்பர் 20, 2024 அன்று வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் வெற்றிமாறன் நடந்து கொண்டது பல விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. அந்த நிகழ்ச்சியில் அவர் தனது உதவி இயக்குனர்களின் பெயரைச் சொல்லாததால் உதவி இயக்குனர்கள் அதைச் சுட்டிக்காட்டினர். அப்போது, “டீம் என்று சொன்னாலே நாம் எல்லோரும் தானடா” என்று கூறிவிட்டு மைக்கை சட்டென்று வைத்துவிட்டு அமர்ந்தார்.
ஒரு படத்தில் வேலை செய்யும் உதவி இயக்குனர்கள் தங்களின் பெயரை இயக்குனர் சொல்வார் என்பதே அவர்களின் சிறிய ஆசையாக இருக்கின்றது. அந்த நம்பிக்கையை வெற்றிமாறன் நிறைவேற்றவில்லை. இந்நிலையில், விடுதலை-2 படத்தின் டிரைலரில் வந்துள்ள “தத்துவம் இல்லாத தலைவர்கள் ரசிகர்களை மட்டுமே உருவாக்குவார்கள், அது எந்த ஒரு முன்னேற்றத்திற்கும் வழி வகுக்காது” என்று ஒரு டயலாக் வந்துள்ளது. வெற்றிமாறன் விஜயைச் சுட்டிக்காட்டி எழுதிய வசனம் என்று பலரும் விமர்சித்து வருகிறார்கள்.
இதனை அடுத்து நடிகர் கிஷோர் தன்னுடைய “பாராசூட்” பட பிரமோஷனுக்கான நிகழ்ச்சியில் பங்கேற்றபோது தனது கருத்தைத் தெரிவித்திருந்தார். அதில், “அந்த மாதிரி சொல்ல முடியாது, இந்தப் படத்தின் மொத்த கதையும் கம்யூனிச தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டது. இன்று நாம் பார்க்கும் அனைத்து வேலைகளுக்கும் ஓர் ஊதியம் இருந்தால் தான் அதைச் சிறப்பாக செய்வது வழக்கமாக இருக்கின்றது. ஆனால் கம்யூனிஸ்ட் வாசிகள் தங்கள் கட்சியின் கொள்கைக்காக எந்தப் பலனையும் எதிர்பார்க்காமல் உழைத்திருக்கிறார்கள். மற்றவர்களின் முன்னேற்றத்திற்காகத் தங்கள் உயிரையும் கொடுக்கத் துணிந்திருக்கிறார்கள். அதைப்பற்றித் தான் இந்தப் படத்தில் பேசப்பட்டுள்ளது.
அப்படிப்பட்ட இந்தப் படத்தில் இந்த வசனம் இருப்பது ஆச்சரியம் இல்லை. இயக்குனர் வெற்றிமாறன், “எப்போதும் என் படங்களில் நடிப்பவர்கள் அனைவருமே சாதாரண நடிகர்கள்தான்” என்று கூறுவார். மக்கள் பிரச்சனைகளை மையமாக வைத்துதான் வெற்றிமாறன் படம் இயக்குகிறார். அதில் ஹீரோக்களைத் தாண்டி அந்தக் கதைக்குத் தான் முக்கியத்துவம் இருக்கும். இதனால்தான் பெரிய நடிகர்கள் கூட இந்த மாதிரியான படங்களில் நடிப்பதைத் தவிர்த்து விடுவார்கள். வெற்றிமாறனுக்கு என்றே தனி ஆடியன்ஸ் உள்ளனர். இவர் கதை வித்தியாசமாகத் தான் இருக்கும் என்ற எண்ணத்தில்தான் அவர்கள் படம் பார்க்கவே வருவார்கள். இந்தப் படத்திலும் வெற்றிமாறன் தன் கதைக்கு ஏற்ற மாதிரி ஒரு வசனத்தை வைத்திருக்கிறார். அந்த வசனம் மற்றவர்களைக் குறி வைத்து எழுதப்பட்டது அல்ல, இயல்பாக வருகின்ற வசனங்கள்தான்” என்று கூறியுள்ளார்.