மத்திய அரசின் சார்பில் மக்களுக்குப் பல சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், மத்திய அரசு ஊழியர்கள் “8-வது பே கமிஷனின்” அறிவிப்பிற்காகக் காத்திருக்கின்றனர். இந்தப் பே கமிஷன் உருவாக்கப்பட்டப் பின்புதான் தற்போது உள்ள பொருளாதாரச் சூழலுக்கு ஏற்ப சம்பளம் குறித்து பரிந்துரைகள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
8-வது பே கமிஷன் குறித்து அரசாங்கம் இதுவரை எந்தத் தகவலையும் உறுதிப்படுத்தவில்லை. இருந்தாலும், இப்போது வரவிருக்கும் மத்திய பட்ஜெட்டின்போது இதற்கான அறிவிப்புகள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசு ஒப்புதல் அளித்தால் அடுத்த ஆண்டு ஜனவரியில் 8-வது பே கமிஷனின் கீழ் பல மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
NC – JCM அமைப்புகளின்கீழ் ஊழியர்களுக்கான சம்பள உயர்வு 2.86 என்ற ஃபிட்மென்ட் ஃபாக்டரின் அடிப்படையில் வழங்க வேண்டும் என்று முன்மொழியப்பட்டது. ஃபிட்மென்ட் ஃபாக்டர் என்பது சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களைக் கணக்கிடும் ஒரு அளவுகோலாகக் கருதப்படுகிறது.
7-வது பே கமிஷனின் ஆணைப்படி, பிக்மென்ட் பாக்டர் 2.57 என்று நிர்ணயிக்கப்பட்டது. இதன் காரணமாக அடிப்படை சம்பளம் ரூ, 7,000 யிலிருந்து ரூ. 18,000 ஆக உயர்ந்தது. 8-வது பே கமிஷனில் மத்திய அரசு இதை ஏற்றுக் கொண்டால் ஊழியர்களின் சம்பளம் 2.86 ஆக உயரும். அதாவது, குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ. 18000 யிலிருந்து ரூ. 51,480 ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இது மிகப்பெரிய ஊதிய உயர்வாக இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
8-வது பே கமிஷனில் மாற்றங்கள் ஏற்பட்டால் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கும் மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில் இருக்கும். அதாவது, 7-வது பே கமிஷனில் குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகை ரூ. 9000 என்று கணக்கிடப்பட்டது. இந்த 2.86 ஃபிட்மென்ட் ஃபாக்டர் அமலுக்கு வந்தால் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் ரூ. 25,740 வரை உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஓய்வூதியதாரர்களுக்கு நன்மைகளை அளிக்கும்.
அகவிலைப்படி மற்றும் பிற சலுகைகள் இந்த சம்பளம் மற்றும் ஓய்வூதிய மாற்றங்களுக்கு ஏற்றவாறு கணக்கிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அகவிலைப்படி வருடத்திற்கு 2 முறை மதிப்பாய்வு செய்யப்படுகிறது. பணம் வீக்கத்தை ஈடுசெய்வதில் அகவிலைப்படி ஒரு முக்கியப் பங்கை வகிக்கிறது. பே கமிஷனானது பொதுவாக 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை அமைக்கப்படும். 7-வது பே கமிஷன் 2014-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு 2016-ஆம் ஆண்டு வெளியானது. அதேபோல், 8-வது பே கமிஷன் 2026-ஆம் ஆண்டு வரப்போகிறது என்றால், அதற்கான அறிவிப்பு இப்போது வருவது அவசியமாகும்.
பிப்ரவரி, 2025-இல் மத்திய நீதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்யும்போது 8-வது பே கமிஷனைப் பற்றி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
(இந்த செய்தி தகவல் நோக்கத்துடன் எழுதப்பட்ட தொகுப்பாகும். துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளங்களில் பார்த்துக் கொள்ளலாம்).