தமிழகத்தின் ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் சரிபார்ப்பு முறையினால் மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்துள்ளனர். PoS எனப்படும் கைரேகை பதிவு கருவியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு, ரேஷன் பொருட்களை பெறுவதில் தடையாக அமைந்துள்ளது.
ரேஷன் அட்டைகளுடன் ஆதார் எண்களை இணைத்து, கைரேகை சரிபார்ப்பு மூலம் பொருட்கள் வழங்கும் முறை நாடு முழுவதும் நடைமுறையில் உள்ள ஒரு முக்கிய திட்டமாக செயல்படுகிறது. ஆனால், இந்த முறை தோல்வியடைந்ததால், மக்கள் வரிசையில் நின்று சிரமப்பட்டு திரும்பியுள்ளனர்.
38 மாவட்டங்களில் உள்ள 34,790 ரேஷன் கடைகளில், கடந்த இரண்டு நாட்களாக இந்த பிரச்சனை தொடர்ந்து முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் இந்த தடைகளால் பாதிக்கப் பட்டுள்ளனர். பலரது ஆதார் எண்கள் தவறாக பதிவு செய்யப்பட்டதாகவும், கைரேகை சரிபார்ப்பு வேலை செய்யாததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரேஷன் கடை ஊழியர்கள் இந்த பிரச்சனைக்கு சாப்ட்வேரில் ஏற்பட்ட பிழை மற்றும் தவறான தகவல் இணைப்புகளை காரணமாக கூறுகின்றனர். இது தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் செயல் முறையை முடக்கி மக்களை பெரும் இக்கட்டான நிலைக்கு தள்ளியுள்ளது.
இந்த தற்செயலான கோளாறுக்கு விரைந்து தீர்வு காண தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகிறார்கள். நாளையும் இந்த பிரச்சனை தொடர்ந்தால், மிக பெரிய அளவில் மக்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.