தான்சானியா நாட்டில் சுரங்க தொழிலாளியாக இருப்பவர் சானினியு லைசர். இவர் அந்நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள சுரங்கம் ஒன்றில் பணி செய்தபோது “டான்சனைட்’ என்னும் இரண்டு இரத்தின கற்கள் இவருக்கு கிடைத்துள்ளது. ஒரு கல் 9.27 கிலோ எடையும், மற்றொன்று 5.8 கிலோ எடையும் இருந்துள்ளது. இதற்கு முன்பு கிடைத்த இரத்தின கற்களை விட இதுவே அதிக எடை கொண்டதாகும்.
இந்நிலையில் சுரங்கத்தில் கிடைக்கும் கற்களை அரசாங்கத்திடம் விற்கும் வகையில் அந்நாட்டு அரசு கடந்தாண்டு வர்த்தக வழிமுறை ஒன்றை செய்துள்ளது. அதன் மூலம் சுரங்க தொழிலாளி சானினியு தனக்கு கிடைத்த இரண்டு கற்களையும் விற்பனை செய்துள்ளார். இந்த இரண்டு கற்களுக்கும் 7.74 பில்லியன் தான்சானியன் ஷில்லிங்ஸ் அவருக்கு கொடுக்கப்பட்டது. இந்த பணம் இந்திய ரூபாய் மதிப்பில் 25 கோடிக்கும் அதிகமானதாகும்.
இந்த பணத்தின் மூலம் தனது வீட்டின் அருகே ஒரு பெரிய ஷாப்பிங் மால் கட்டப்போவதாகவும், மேலும் அவரது பகுதியில் குழந்தைகளை பள்ளிக்கூடம் அழைத்துச் செல்ல வசதி இல்லாததால் பள்ளிக்கூடம் ஒன்றை கட்டப்போவதாகவும் சானினியு லைசர் கூறியுள்ளார். ஒரு சாதாரண சுரங்க தொழிலாளியாக இருந்து ஒரேநாளில் பல கோடிகளுக்கு அதிபதியான சம்பவம் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.