தமிழ் மாதத்தில் சிறப்பு மிகுந்த மாதமாக உள்ள தை முருகனுக்கு உகந்த ஒன்றாகும்.இந்த தை மாதத்தில் வரும் தைப்பூசம் தமிழ்நாடு மட்டுமின்றி உலகளவில் கொண்டாடப்படும் ஒரு நிகழ்வு ஆகும்.வருகின்ற பிப்ரவரி 11 அன்று(தை 29) தைப்பூச நாள் கொண்டாடப்பட இருக்கின்றது.முருகப் பெருமான் பழநி மலையில் ஞானபழமாக ஆண்டி கோலம் பூண்ட நாளை தான் தைப்பூசமாக நாம் கொண்டாடுகின்றோம்.
இந்த நாளில் முருகனை தரிசித்தால் வாழ்வில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.எப்படி சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருக்கிறோமோ அதேபோல் தான் முருகனுக்கும் விரதம் இருந்து வழிபடுவது வழக்கம்.
தீவிர முருக பக்தர்கள் மார்கழி மாதத்திலேயே விரத்தை தொடங்கிவிடுவார்கள்.மார்கழி மாதத்தில் இருந்து தை பூச நாள் வரை 48 நாட்கள் விரதம் இருந்து முருகனை வழிபடுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.
வாழ்வில் செல்வம் பெருக கடன் பிரச்சனை தீர முருகப் பெருமானுக்கு விரதம் இருந்து வழிபடலாம்.துன்பங்கள்,நோய்கள் நீங்கி ஆரோக்கியமாக வாழ தை பூச நாளில் முருகனை வணங்கி அவரின் அருளை பெறலாம்.
தைபூசம் விரதம்:
நீங்கள் முருகப் பெருமானுக்கு விரதம் இருக்க போகின்ற நாளில் அதிகாலை நேரத்தில் எழுந்து தலைக்கு நீராட வேண்டும்.பிறகு அருகில் இருக்கின்ற முருகன் கோயிலுக்கு சென்று நீங்கள் எதற்காக விரதம் இருக்கிறீர்கள் என்பது குறித்து முருகனிடம் கோரிக்கை வைத்து மனதார வழிபடுங்கள்.
அதன் பிறகு தங்கள் வீட்டிற்கு சென்று பூஜை அறையில் உள்ள முருகன் சிலை அல்லது திருவுருவப் படத்திற்கு சந்தன குங்குமத்தில் பொட்டு வைத்து முருகனுக்கு உகந்த நெய்வேத்தியம் அல்லது இனிப்பு பண்டம் செய்து படைக்க வேண்டும்.இதுபோன்று செய்ய இயலாதவர்கள் வெற்றிலை பாக்கு வைத்து தங்கள் விரதத்தை தொடங்குங்கள்.
விரதத்தை தொடங்கிய பிறகு தினமும் முருகன் கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும்.தினமும் கோயிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டில் முருகன் படத்திற்கு முன் விளக்கேற்றி கந்தசஷ்டி கவசம் சொல்லி விரதம் இருக்கலாம்.
அதேபோல் ஓம் சரவண பவ என்ற மந்திரத்தை சொல்லியும் முருகனை வழிபடலாம்.இந்த விரத நாளில் பால் பழம் அல்லது ஒருவேளை உணவு உட்கொள்ளலாம்.உடல் நலப் பிரச்சனை இருப்பவர்கள் மூன்றுவேளை உணவு உட்கொண்டும் விரதத்தை கடைபிடிக்கலாம்.
இந்த 48 நாள் விரத நாட்களில் அசைவ உணவுகளை நிச்சயம் தவிர்த்துவிட வேண்டும்.இந்த விரத நாட்களில் தினமும் தலைக்கு குளிக்க வேண்டிய அவசியமில்லை.முருகனுக்கு உகந்த செவ்வாய் கிழமையில் தலைக்கு குளித்தால் போதுமானது.பெண்கள் தங்கள் மாதவிலக்கு நாட்களிலும் விரதத்தை கடைபிடிக்கலாம்.ஆனால் பூஜை அறைக்கு செல்வதை தவிர்த்துவிட வேண்டும்.நாற்பத்து எட்டு நாள் விரதத்தை தவறியவர்கள் 21 நாள் விரதத்தை கடைபிடிக்கலாம்.