PMK DMK: வீரபாண்டியர் மரணத்திற்கு முக்கிய காரணம் ஸ்டாலின் தான் என பாமக அருள் குற்றம்சாட்டியுள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கட்சி ரீதியான சந்திப்பு ஒன்றில் வீரபாண்டியர் குறித்து பேசியதற்கு திமுகவில் உள்ள சேலம் பொறுப்பு அமைச்சர் இதற்கு எதிராக அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் வன்னியர்களுக்கு அதிகளவில் நன்மை செய்தது திமுக தான் என்று குறிப்பிட்டு தெரிவித்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசும் விதமாக பாமக அருள் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றை வைத்தார்.
இதில், தமிழகத்திற்கு வந்த பெரும்பாலான முதலமைச்சர்கள் வன்னியர்களுக்கு துரோகம் அளித்திருந்தாலும், மிகப்பெரிய துரோகம் செய்தது தற்போதைய முதல்வர் ஸ்டாலின் தான். இட ஒதுக்கீட்டிற்காக போராடி உயிர் தியாகம் செய்தவர்களுக்கு மணி மண்டபம் கட்டினாலும் அவர்களின் நோக்கம் ஏதும் தற்பொழுது வரை நிறைவேறவில்லை. அவர்கள் நோக்கம் நிறைவேறாமல் மணிமண்டபம் கட்டுவதால் எந்த ஒரு பலனும் கிடைப்பதில்லை.
அதேபோல் வீரபாண்டி இருந்திருந்தால் கட்டாயம் இட ஒதுக்கீடு கிடைத்திருக்கும். அவரது மரணத்திற்கு முக்கிய காரணம் ஸ்டாலின் தான். கருணாநிதி முதலமைச்சராக செயல்படாத நிலையில் ஸ்டாலின் அதன் பொறுப்புகளை ஏற்று பார்த்து வந்தார். அச்சமயத்தில் தான் வீரபாண்டியார் சிறையிலிருந்து வெளியே வந்தார். அப்பொழுது அவருக்கு கிடைத்த வரவேற்பானது முதல்வர் கருணாநிதி மற்றும் அவரது மகன் என யாருக்கும் கிடைத்ததில்லை.
இதை பொறுக்க முடியாமல் அவரது குடும்பம் சேர்ந்து அவருக்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்துவிட்டது. மேற்கொண்டு கட்சி ரீதியாக மன உளைச்சலுக்கு ஆளானார். இப்படி இருக்கும் சூழலில் தான் திடீரென்று உயிரிழந்தார். அந்த வகையில் வீரபாண்டியர் குறித்து அன்புமணி பாராட்டி பேசியதற்கு திமுக அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையானது மிகவும் கண்டனத்திற்குரியது . அதுமட்டுமன்றி தற்பொழுது வரை இட ஒதுக்கீடு கிடைக்காததால்தான் பல்வேறு இளைஞர்களின் வாழ்க்கையானது பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.