வீட்டிலும் வியாபாரத்திலும் ஏற்பட்ட கண் திருஷ்டி நீங்க!!இதை செய்தால் போதும்!!

Photo of author

By Janani

நமது முன்னோர்கள் நாம் நன்றாக வாழ வேண்டும் என்பதற்காக நிறைய வாழ்க்கை நெறிமுறைகளை கற்றுத் தந்துள்ளனர். அவற்றுள் ஒன்று தான் கண் திருஷ்டி ஏற்படாமல் இருப்பதற்கான வழிமுறைகள். ‘கல்லடி பட்டாலும் படலாம் கண்ணடி படக்கூடாது’என்று பெரியவர்கள் சொல்லுவார்கள். அவ்வளவு மோசமானது கண் திருஷ்டி என்பது.

கண் திருஷ்டி இருந்தால் வீட்டிலும் வியாபாரத்திலும் மற்றும் அனைத்து இடங்களிலும் பிரச்சனைகள் தொடர்ந்து ஏற்படும். இந்த கண் திருஷ்டி , தீய சக்திகளை அடியோடு நீக்கவும் மற்றும் திரும்பவும் ஏற்படாமல் இருக்கவும் ஜோதிடர்கள் பல எளிய வழிமுறைகளை தொகுத்து வழங்கியுள்ளனர்.

பொதுவாக ஒருவர் மீது கண் திருஷ்டி படக்கூடாது என்பதற்காக திருநீறு, குங்குமம், சந்தனம் போன்ற தெய்வீகம் சம்பந்தமான பொருட்களை நெற்றியில் வைத்துக் கொண்டால் கண் திருஷ்டி படாது என்கின்றனர். அதனுடன் கழுத்தில் ருத்ராட்சம், படிகம் போன்ற தெய்வ பொருட்களை அணிந்து கொள்வதும் நல்லது.
கால்களிலும் கைகளிலும் கருப்பு கயிறோ அல்லது சிவப்பு நிற கயிறு கட்டுவதாலோ, தலை முடியை திரித்து கயிறாக கால்களில் கட்டிக் கொள்வதாலோ கண் திருஷ்டி ஆனது கண்டிப்பாக நீங்கும் என்றும் கூறியுள்ளனர்.

பிறந்த குழந்தைகளுக்கு கண் திருஷ்டி ஏற்படாமல் தடுக்க சுத்தமான கரிசலாங்கண்ணி சாற்றினை கொண்டு தயாரித்த மையினை குழந்தைகளுக்கு பொட்டாகவோ நீராகவோ வைத்து விடலாம். குழந்தைகளுக்கு தினமும் இரவில் ஆலம் கரைத்து ஊற்றுவது நல்லது என்றும் கூறுகின்றனர். அந்த ஆலம் கரைக்கும் பொழுது ஒரு வெற்றிலை, இரண்டு வரமிளகாய் போட்டு சூடம் ஏற்றாமல் ஆலம் கரைத்து ஊற்ற வேண்டும். அவ்வாறு செய்தால் குழந்தைகள் இரவில் அழாமல் தூங்கும்.

ஐந்து வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு உப்பினை வைத்து சுற்றி போடலாம் என்று கூறுகின்றனர். இரண்டு கைகளிலும் உப்பினை எடுத்து தலையில் வலது புறமாகவும் இடது புறமாகவும் சுற்றி விட்டு அந்த உப்பினை ஒரு பக்கெட்டில் உள்ள தண்ணீரில் போட்டு, அந்த உப்பு கரைந்த பின்னர் வெளியே கொண்டு ஊற்றி விட வேண்டும். மேலும் நாம் குளிக்க கூடிய தண்ணீரிலும் இரண்டு கை உப்பினை போட்டு கரைந்த பின்னர் அந்தத் தண்ணீரில் குளித்தாலும் கண் திருஷ்டி நீங்கும்.

உப்பு, வரமிளகாய், கடுகு, நம் வீட்டின் வாசலில் உள்ள மண் போன்றவற்றை ஒரு அட்டைப்பெட்டியில் போட்டு நமது குடும்பத்தில் உள்ள அனைவரையும் சேர்த்து சுற்றி வீட்டின் முன் வைத்து எரிப்பதாலும் கண் திருஷ்டி விலகும் என்கின்றனர். இவ்வாறு வெள்ளிக்கிழமைகளில் செய்வது சிறப்பு என்றும் கூறியுள்ளனர்.

வீட்டிற்கு கண் திருஷ்டி படக் கூடாது என்றால் அமாவாசை அன்று பூசணிக்காய் உடைப்பது, வீட்டின் உள்ளே நுழையும் இடத்தில் கண்ணாடி அல்லது விநாயகர் படம் வைப்பது, வீட்டிற்கு வெளியே கண் திருஷ்டி படம் மாட்டுவது போன்றவையும் வீட்டின் மேல் கண் திருஷ்டி படாமல் தடுக்கும் என்கின்றனர்.

வீட்டிலோ அல்லது வியாபாரம் செய்யும் இடத்திலோ, ஏதேனும் ஒரு பிரச்சனை வந்து கொண்டே இருந்தால் வெண்கடுகு மற்றும் கல் உப்பினை வீடு முழுவதும் அல்லது கடை முழுவதும் தொடர்ந்து மூன்று நாட்கள் இரவில் இறைத்துவிட்டு மறுநாள் காலை அதனை சுத்தமாக அள்ளி விட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து மூன்று நாட்கள் செய்தால் எப்பேர்பட்ட கண் திருஷ்டியும் விலகும் என்கின்றனர்.

வியாபாரம் செய்யும் இடங்களில் ஒரு கண்ணாடி டம்ளரில் தண்ணீர் ஊற்றி ஒரு எலுமிச்சம் பழத்தை போட்டு தினந்தோறும் வைப்பதன் மூலம் கண் திருஷ்டி விலகும் என்கின்றனர். ஆனால் தினந்தோறும் இந்த தண்ணீர் மற்றும் எலுமிச்சம் பழத்தை மாற்றி விட வேண்டும்.