தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்த இக்கட்டான சூழலில் வருமானம் இழந்த பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
அடிப்படை வாழ்வாதாரத்தை பூர்த்தி செய்ய ஒவ்வொரு ஊழியர்களுக்கும் அந்தந்த நிறுவனம் ஊதியத்தை வழங்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதற்கு மாறாக ஒவ்வொரு மாதமும் அரசு போக்குவரத்து ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்பட்டு வருகிறது. ஏப்ரல் மாதம் மட்டுமே முழுமையாக சம்பளம் வழங்கப்பட்டது. மே மாதம் 10 சதவீதம் குறைந்தது. இதுகுறித்து போக்குவரத்து ஊழியர்கள் கேள்வி எழுப்பியபோது, கடந்த ஆண்டின் விடுப்பு நாட்களை கணக்கெடுத்து இந்த ஆண்டு சம்பளம் வழங்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
இந்நிலையில் ஜூன் மாத சம்பளத்தில் 12000 வரை பிடித்தம் செய்துள்ளதாக அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். சம்பளம் குறித்த பே சிலிப் கேட்டால் தருவதில்லை என்றும் கடந்த 5 மாத சம்பள விவரத்தை கேட்டாலும் தருவதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து தொமுச பொது செயலாளர் நடராசன் கூறுகையில்; அரசாணை 304 ன் படி முழு சம்பளம் வழங்க வேண்டும் என கூட்டமைப்பு சார்பில் போக்குவரத்து அதிகாரிகளுக்கு கடிதம் கொடுத்துள்ளோம். இதுதொடர்பான உடனடி நடவடிக்கை இல்லை என்றால் போராட்டம் நடத்துவோம் என்று கூறினார்.