பொதுவாக ஒருவருக்கு வைக்கக்கூடிய பெயர் ஆனது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. வைக்கக்கூடிய பெயரானது விளங்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்று பெரியோர்கள் கூறுவார்கள். அதாவது அந்தப் பெயரானது காலாகாலத்திற்கும் நிலைத்து நிற்க கூடியதாக இருக்க வேண்டும் என்பதாகும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் நம் குழந்தைக்கு வைக்கக்கூடிய பெயரினை ஜாதகத்தின் அடிப்படையில் வைக்கலாமா? அல்லது நியூமராலஜியின் அடிப்படையில் வைக்கலாமா? என்று பலரும் யோசித்து வருகின்றனர்.
ஒரு சில பெயர்களை நாம் கேட்கும் பொழுது வீரமானதாகவும், அமைதியானதாகவும் தோன்றும். ஒரு பெயரின் உடைய குணங்கள் அல்லது அந்த பெயரினை முன்பு வைத்திருந்தவரின் குணங்கள் தற்போது அந்த பெயரின் வைத்தவருக்கு இருக்கும்.
ஒரு குழந்தை பிறந்து புண்ணியதானம் செய்யும் பொழுது அந்த குழந்தைக்கு இறைவனின் பெயரையோ, குலதெய்வத்தின் பெயரையோ அல்லது நமது மூதாதையரின் பெயரையோ வைக்க வேண்டும் என்று நமது முன்னோர்கள் கூறுவார்கள். ஏனென்றால் அத்தகைய பெயரினை வைத்து நாம் அந்த குழந்தையை அழைக்கும் பொழுது அந்தப் பெயருக்கு உரியவரின் அருளை நாம் பெறுவதாக அர்த்தம்.
ஜாதகத்தின் படி ஒரு குழந்தைக்கு பெயர் வைப்பது என்பது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்து இருக்கிறது. ஆனால் இந்த எண் கணிதத்தின் மூலம் குழந்தைக்கு பெயர் வைப்பது என்பது தற்போது சில ஆண்டுகளாக தான் இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த எண் கணித முறை வந்தாலும் கூட, எண்களின் வலிமையை வைத்து ஒருவரின் ஆயுள், வலிமை, வாழ்க்கை ஆகிய அனைத்தையும் கணக்கிடக் கூடியதாக இந்த எண் கணித முறையை ஜோதிடர்கள் அமைத்து தந்துள்ளனர்.
இந்த எண் கணித முறையையும் கிரகங்களின் மூலமாகவே கணக்கிட்டுள்ளனர். அதாவது 1 என்பது சூரியன், 2 சந்திரன், 3 குரு, 4 ராகு, 5 புதன், 6 சுக்கிரன், 7 கேது, 8 சனி, 9 செவ்வாய். இப்பொழுது என் கணித கணக்கீடு 1 என வந்தால் அது சூரியனின் ஆதிக்கம் கொண்ட பெயராக கருதப்படும். இந்த முறையில் ஒருவர் பிறந்த தேதி மாதம் வருடம் ஆகிய அனைத்தையும் கூட்டி எண் கணிதத்தினை கூறுகின்றனர்.
ஜாதகத்தை அடிப்படையாக வைத்து அதில் வரக்கூடிய எழுத்துக்களை எடுத்து அந்த எழுத்துக்களில் நமக்கு தேவையான பெயரை தேர்ந்தெடுத்து ஒரு குழந்தைக்கு வைப்பது தான் சிறந்தது. என்னதான் நியூமராலஜியும் ஜாதகமும் ஒரே விதமாக அமைந்தாலும் கூட ஜாதகத்தின் அடிப்படையில் ஒரு குழந்தைக்கு பெயர் வைப்பது தான் சிறந்தது.
இவ்வாறு வைக்கும் பெயர் தெய்வமே நமக்கு தந்த பெயராக கருதப்படும். ஆகையால் எந்த பெயரினை நாம் நம் குழந்தைக்கு வைத்தாலும் அந்தப் பெயரில் ஒரு பொருள் உள்ளதாக இருக்க வேண்டும். ஏனென்றால் அந்த பொருள் தான் அந்த குழந்தையின் வாழ்க்கையை உயர்த்தும்.