பொதுவாக நமது குலதெய்வம் என்பது வம்சா வழியாக தொடர்ந்து வழிபட்டு வந்த தெய்வம் என்பது பொருள். ஒரு தெய்வம் நமக்கு குலதெய்வமாக மாறுகிறது என்றால் அந்த தெய்வத்தினை குறைந்தபட்சம் ஏழு தலைமுறைகளாக தொடர்ந்து வழிபட்டு வந்திருக்க வேண்டும். அவ்வாறு வழிபடக்கூடிய தெய்வத்தை தான் நாம் குலதெய்வம் என்றும் சொல்ல முடியும்.
ஒருவர் தற்போது ஒரு தெய்வத்தினை வழிபட்டுக் கொண்டிருந்து, பிறகு வேறு ஒரு மதத்திற்கு மாறினாலும் கூட அவரது குலதெய்வம் என்பது மாறாது. அதாவது அவர் மாறி இருந்த மத தெய்வத்தினை அவர் ஏழு தலைமுறை வழிபட்டால் மட்டுமே அந்த தெய்வம் அவருக்கு குலதெய்வமாக மாறும். அது வரையில் அவரது முன்னோர்கள் எந்த தெய்வத்தினை வழிபட்டர்களோ அந்த தெய்வம் தான் அவரது குலதெய்வம்.
ஒருவரது குலதெய்வம் எது என்று தெரியாத போது அவர் ஒரு இஷ்ட தெய்வத்தினை வழிபட்டு அதனை தான் எனது குலதெய்வம் என்று கூறி வருவார்கள். ஆனால் அந்த தெய்வத்தினை அவர் மற்றும் பிற்காலத்தில் வரக்கூடிய தலைமுறையினர் என ஏழு தலைமுறையினர் வழிபட்டால் மட்டுமே அந்த தெய்வம் அவர்களது குல தெய்வமாக மாறும்.
ஒரு குடும்பத்திற்கு குலதெய்வத்தின் அருள் இல்லை அல்லது குலதெய்வத்தின் அனுகிரகமே இல்லை என்பதை சுட்டி காட்டக்கூடிய நட்சத்திரங்கள் அதாவது மரபணு கொண்ட நட்சத்திரங்கள் மூன்று உள்ளதாக ஜோதிடர்கள் கூறுகின்றனர். அவை அஸ்வினி மகம் மூலம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நமது குடும்பத்தில் உள்ளனர் என்றால் அந்தக் குடும்பத்தில் குலதெய்வத்தின் அனுகிரகம் இல்லை என்று அர்த்தம்.
அதேபோன்று துலாம் லக்னத்தில் ஒருவர் பிறந்திருக்கிறார் என்றால் அவர் பிறப்பதற்கு முன்பே குலதெய்வத்தின் அனுக்கிரகம் விட்டுப் போய்விட்டது என்று அர்த்தம். குலதெய்வ வழிபாடு நன்றாக செய்பவர்கள் வீட்டில் இத்தகைய நட்சத்திரத்தில் குழந்தைகள் பிறக்க மாட்டார்கள்.
இவ்வாறு குலதெய்வத்தின் அருள் கிடைக்காமல் போனதற்கு காரணம் ஒன்று குலதெய்வ கோவில்களை மாற்றி வணங்கி வந்திருப்பார்கள். இரண்டு குலதெய்வத்தையே மாற்றி வணங்கி வந்திருப்பார்கள். மூன்றாவது ஒரு சில குடும்பங்களுக்கு இரண்டு அல்லது மூன்று குல தெய்வங்கள் இருக்கும் ஆனால் அவர்கள் காலப்போக்கில் ஒரு குலதெய்வத்தை மட்டுமே வழிபட்டு மற்ற தெய்வத்தை விட்டிருப்பார்கள் இதனால்தான் ஒரு குடும்பத்தில் குலதெய்வத்தின் அனுக்கிரகம் கிடைக்காமல் இருக்கும்.
எனவே குலதெய்வம் எது என தெரியாதவர்கள் நமது அப்பா அல்லது தாத்தா ஆகியோர் வாழ்ந்த பூர்வீக இடம் எது என தெரிந்து கொண்டு அதன் பிறகு நமது குலதெய்வத்தை அறிந்து வழிபட வேண்டும்.