விஜய் அரசியல் வரவுக்கு பின் தமிழக அரசியலில் ஏற்பட்ட பரபரப்பை தொடர்ந்து தற்போது அதிமுகவில் மீண்டும் வெடித்துள்ள உட்கட்சி பூசல் அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அதிமுகவின் மூத்த தலைவரான செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சம்பவம் தான் தற்போது தமிழக அரசியலில் விவாத பொருளாக மாறியுள்ளது. இவ்வளவு நாள் அமைதியாக இருந்த அவர் தற்போது விமர்சிக்க காரணம் என்ன என பலரும் அலசி ஆராய தொடங்கி விட்டனர்.
அந்த வகையில் தற்போது அதிமுகவில் ஏற்பட்ட இந்த சர்ச்சைக்கு பின் புலத்தில் பாஜக உள்ளதாக கூறப்படுகிறது. ஒரே கூட்டணியில் இருந்த அதிமுக மற்றும் பாஜக பிரிந்து தற்போது தனித்தனியாக செயல்பட்டு வருகின்றன. இந்த பிரிவுக்கு காரணமாக பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் இரு கட்சிகளும் இணையாமல் தமிழக அரசியலில் திமுக கூட்டணிக்கு எதிராக வலிமையான கூட்டணியை அமைக்க முடியாது என்பது அரசியல் ஆர்வலர்கள் கருத்தாக உள்ளது.
அந்த வகையில் எப்படியாவது வலிமையான கூட்டணியை அமைக்கும் முயற்சியில் இரு கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றனர். அதில் மத்தியில் ஆளும் பாஜக முந்திக் கொண்டு அதிமுக உட்கட்சி பிரச்னையைச் தூண்டி விட்டு கட்சியை மேலும் உடைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே போல பாமக உள்ளிட்ட கட்சிகளை தங்கள் கூட்டணிக்கு கொண்டு வந்து அதிமுகவின் கூட்டணி பலத்தை உடைத்துள்ளது.ஆனால் இவ்வாறு எடப்பாடி பழனிசாமியை தங்கள் வழிக்கு கொண்டுவர பாஜக எடுத்த முயற்சிகள் அனைத்தும் கை கொடுக்காமல் போக தற்போது செங்கோட்டையன் மூலமாக காயை நகர்த்த ஆரம்பித்துள்ளது.
ஏற்கனவே தங்களுக்கு ஆதரவாக உள்ள ஒபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் தரப்பால் தேர்தல் முடிவில் பெரிதாக எந்த பலனும் கிடைக்கவில்லை என்பதால் மேலும் சிலரை அக்கட்சியிலிருந்து தங்கள் வசம் கொண்டு வர பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதில் முதல் நபராக செங்கோட்டையன் பக்கம் பாஜக திரும்பியதால் தான் அவர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக விமர்சனத்தை ஆரம்பித்துள்ளார் என்று கூறப்படுகிறது.இது போல அதிமுகவிலிருந்து ஒரு கூட்டத்தை தங்கள் பக்கம் திருப்ப வேண்டும் அல்லது தாங்கள் விரும்பியது போல ஒன்றிணைந்த அதிமுகவை தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கமாக உள்ளது.
இதற்கு மேலும் எடப்பாடி பழனிசாமி தங்கள் பக்கம் வரவில்லை என்றால் பாஜக எடுக்கும் அடுத்தடுத்த நகர்வுகள் அவருக்கு மேலும் அதிர்ச்சியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதில் விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றி கழகத்தை பாஜக கூட்டணிக்கு இழுக்கும் முயற்சியும் அடங்கும். அதற்காக தான் தற்போது விஜய் அவர்களுக்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என யூகங்கள் பேசப்பட்டு வருகிறது.