திருமணம் ஆகி முதல் குழந்தை பிறந்த பிறகு அடுத்த குழந்தைக்கான இடைவெளி 3 அல்லது 4 வருடம் விட வேண்டும் என்பதற்காக மருத்துவரின் அறிவுரையாக இந்த காப்பர் டி பெண்களுக்கு போடப்படுகிறது. ஒரு குழந்தை பிறந்த அடுத்த வருடத்திலே இன்னொரு குழந்தை வேண்டும் என்பவர்களும் உள்ளனர். அதேசமயம் ஒரு குழந்தை பிறந்தவுடன் அடுத்த குழந்தை ஐந்து வருடங்களுக்குப் பிறகுதான் எங்களுக்கு வேண்டும் என்று கூறுபவர்களும் இருக்கின்றனர். இவ்வாறு கூறுபவர்களுக்கு மருத்துவரின் அறிவுரையின்படி இந்த காப்பர் டி போடப்படுகிறது.
குழந்தை தாமதமாக வேண்டும் என்பவர்கள் கருத்தடைக்கு என்னென்ன பயன்படுத்தலாம்? எவ்வாறு பயன்படுத்தலாம்? என்பது குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். கருத்தடைக்கு என காண்டம், மாத்திரைகள், ஹார்மோன் ஊசிகள், காப்பர் டி போன்ற பலவிதமான முறைகள் உள்ளன. இவற்றுள் காப்பர் டி மட்டும்தான் ஹார்மோனல் பிரச்சனைகள் எதுவும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும். ஆனால் 100 ல் 5 பேர் காப்பர் டி போட்டும் கர்ப்பமாகி விடுகின்றனர்.
இதற்கு காரணம் காப்பர் டி சிறிது கீழே இறங்கி இருக்கலாம். இவ்வாறு இறங்கி இருக்கும் பொழுது கரு உருவாகிவிட்டால் கருவிற்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் காப்பர் டி யை அகற்ற முடிந்தால் அகற்றி விடலாம். ஆனால் ஒரு சிலருக்கு காப்பர் டி க்கு மிக அருகிலேயே கரு உருவாகி இருந்தால் காப்பர் டி எடுக்கும் பொழுது கருச்சிதைவும் ஏற்படலாம். எனவே காப்பர் டி பயன்படுத்துபவர்கள் வருடத்திற்கு ஒருமுறை மருத்துவரிடம் சென்று சரி பார்த்துக் கொள்ள வேண்டும்.
அவ்வாறு இல்லை என்றால் காப்பர் டி யின் நூலானது பிறப்புறுப்பு வரையிலும் நம்மால் உணர முடிகிறதா என்று அவ்வப்போது சரி பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு வேளை காப்பர் டி யின் நூல் இருப்பதை உணரமுடியவில்லை என்றால் மருத்துவரிடம் சென்று பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.
மாதந்தோறும் மாதவிடாய் வருகின்ற வேளையில் இவ்வாறு நாமலாகவே பரிசோதித்துக் கொள்ள வேண்டும். மாதந்தோறும் இந்த பரிசோதனையை நாம் பின்பற்றவில்லை என்றால்தான் நமது கவனக்குறைவால் கரு உருவாகிவிடுகிறது.
காப்பர் டி யை போடும்பொழுது சில பெண்களுக்கு அதிகப்படியான ரத்தப்போக்கு, மாதவிடாயின் போது அதிகப்படியான வலி, மாதவிடாய் ஏற்படக்கூடிய நாட்கள் 3 அல்லது 4 நாட்கள் என இருப்பவர்களுக்கு 6 அல்லது 7 நாட்களாக கூட மாறலாம். இத்தகைய அறிகுறிகள் இருப்பது காப்பர் டி பயன்படுத்தக்கூடிய பெண்களுக்கு பொதுவான ஒன்றுதான். எனவே மாதவிடாயின் போது மருத்துவரிடம் சென்று அதற்கான வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம்.
ஆனால் மாதவிடாய் நாட்கள் இல்லாமல் மற்ற நாட்களிலும் வலி ஏற்படுகிறது அல்லது அதிகப்படியான வெள்ளைப்படுதல், பிறப்புறுப்பில் துர்நாற்றம் வீசுதல் போன்ற பிரச்சனைகள் இருந்தால் கண்டிப்பாக மருத்துவரை அணுகி பார்க்க வேண்டும். ஏனென்றால் ஏதேனும் தொற்றுகள் ஏற்பட்டிருந்தால் மட்டுமே இந்த பிரச்சனைகள் ஏற்படும். எனவே மருத்துவரை அணுகி அதற்கான பரிசோதனையை செய்து கொள்வது மிக மிக அவசியம்.
காப்பர் டி போட்டுக் கொண்டிருப்பதால் கணவன் மனைவி இடையே உள்ள தாம்பத்திய உறவில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது, ஹார்மோன் பிரச்சனைகளும் ஏற்படாது. அதேசமயம் நமக்கு எப்பொழுது குழந்தை வேண்டுமோ அப்பொழுது காப்பர் டி யை அகற்றிவிட்டு குழந்தையை பெற்றுக் கொள்ளலாம். சில அரசு மருத்துவமனைகளில் குழந்தை பிறப்பின் போது அவர்களுக்கு தெரிந்தோ தெரியாமலோ காப்பர் டி யை வைத்து விடுகின்றனர். அவ்வாறு இருக்கும் பொழுது நமக்கு விருப்பம் என்றால் வைத்துக் கொள்ளலாம் இல்லை என்றால் அந்த மருத்துவரிடமோ அல்லது வேறு மருத்துவரிடமோ சென்று அதனை அகற்றிக் கொள்ளலாம்.
காப்பர் டி என்பது பெண்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுத்தாத ஒரு கருத்தடை முறையாகும். ஆனால் அதனை அவ்வப்போது பரிசோதித்து கொள்வதன் மூலமே கரு உருவாகாமல் பார்த்துக் கொள்ள முடியும் என்ற விழிப்புணர்வு மக்களுக்கு அவசியம் தேவை.